தஞ்சாவூர்: தஞ்சாவூர் தென்னக பண்பாட்டு மையம் நடத்தும் கம்பராமாயண பாராயணம் துவக்க விழாவை மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் பங்கேற்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர், தென்னகப்பண்பாட்டு மையத்தின் இயக்குநர் கோபாலகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தில், கி.பி.12-13 நுாற்றாண்டுகளில், வால்மீக ராமயணத்தை தழுவி இயற்றப்பட்ட கம்பராமயணம் சிறப்பான கலாச்சாரத்தைத் தன்னகத்தே கொண்டுள்ளது.
கம்பர் பிறந்த ஊரான மயிலாடுதுறை மாவட்டம், தேரெழுந்துாரில் உள்ள கம்பர்மேடு என்ற பகுதியில், உள்ளூர் கம்பராமாயண குழுக்களால் நடத்தப்பெற்றுவந்த, தமிழ் கம்பராமாயண பாராயணம் காலபோக்கில், குறைய தொடங்கி விட்டது.
தற்போது, புதிய தலைமுறையினர், கம்பன் காவியத்தில் போதிய ஈடுபாடு காட்டாததால், தமிழ் கம்பராமாயணம் மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. மீண்டும் இத்தகைய கம்ப ராமயணத்தின் கலாச்சாரத்தை மீட்டுருவாக்கும் வகையில், இந்திய அரசு கலாச்சாரத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும், தஞ்சாவூரில், தென்னகப் பண்பாட்டு மையம் கம்பராமயண பாராயணத்தை நடத்த உள்ளது.
இதையடுத்து வரும், மார்ச்.18ம் தேதி, மாலை 6:00 மணிக்கு, திருச்சிராப்பள்ளி மாவட்டம், ஸ்ரீரங்கம், சிங்கர் கோவில் கலையரங்கில், மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத், கம்பராமயண பாராயணத்தை துவக்கி வைக்கிறார். கம்பராமாயண கழகங்களைக் சேர்ந்தோரின் வாயிலாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. இதில், வசன கவியுடன் கூடிய சீதா கல்யாண நாட்டிய நாடகமும் நடைபெற உள்ளது.
இதனைத் தொடர்ந்து மார்ச் 20ம் தேதி முதல் 29ம் தேதி வரை, தமிழகத்தில் பல பகுதிகளில், கம்பராமாயண பாராயாணம் நிகழ்ச்சி நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், மார்ச்.30ம் தேதி முதல் ஏப்.6ம் தேதி வரை, கம்பர் பிறந்த கம்பர்மேட்டில், கம்பராமாயணம் தொடர்பாகன பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது.
இந்நிகழ்ச்சியில், தமிழக கவர்னரும்,தென்னகப் பண்பாட்டு மைய தலைவருமான ரவி, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கம்பராமாயண நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள உள்ளனர் இவ்வாறு அவர் கூறினார்.