சென்னை: இன்று கனமழை பெய்யும் என்பதால், நீலகிரி, கோவை உள்ளிட்ட இரு மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு:
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. 150க்கும் மேற்பட்ட இடங்களில் மிதமானது முதல் கனமழை பெய்தது. நேற்று காலை நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் மாநிலத்தில் அதிகபட்சமாக அவலாஞ்சியில் 31 செ.மீ., மழை பெய்துள்ளது.
வால்பாறை, மேல் பவானி, 25, சின்னக்கல்லாறு, 23, சின்சோனா, வால்பாறை, 17, மாஞ்சோலை, 10, குண்டாறு அணை, 7, தேக்கடி, செங்கோட்டை, 6, திற்பரப்பு, 5 செ.மீ.
மேற்கு திசையில் வீசும் காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் மலையோர பகுதிகளில் இன்று கனமழை பெய்யும். இதற்காக ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும். நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் உள்ள மலைப் பகுதிகளில் நாளை கனமழை பெய்யும்.
சென்னையில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்; சில இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யும். வங்கக்கடலில் மத்திய மேற்கு மற்றும் வடமேற்கு பகுதியில் வரும் 19ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.