மூணாறு: கேரளம் மாநிலம் இடுக்கி மாவட்ட ஆட்சியராக இருந்த ஷீபா ஜார்ஜ் வருவாய்த்துறை கூடுதல் செயலாளராக பதவி உயர்வு பெற்றுச் சென்றதையடுத்து இடுக்கியின் புதிய ஆட்சியராக மதுரையைச் சேர்ந்த விக்னேஸ்வரி பொறுப்பேற்றுள்ளார்.
விக்னேஸ்வரி இதற்கு முன்பு கேரள மாநில சுற்றுலா வளர்ச்சிக் கழக இயக்குநர், கல்லூரி கல்வி இயக்குநர், கோட்டயம் ஆட்சியர் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்தவர். மதுரையை பூர்விகமாக கொண்ட விக்னேஸ்வரி மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் பி.இ. சிவில் பட்டம் பெற்றுள்ளார்.
இவரது கணவர் என்.எஸ்.கே.உமேஷ் எர்ணாகுளம் மாவட்ட ஆட்சியராக உள்ளார். இருவரும் 2015-ம் ஆண்டு ஐஏஏஸ் தேர்வில் வெற்றி பெற்றவர்கள். கோழிக்கோடு சார் ஆட்சியராக விக்னேஸ்வரியும், வயநாடு சார் ஆட்சியராக உமேஷும் இருந்தபோது இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர். தமிழர்கள் அதிகம் வசிக்கும் இடுக்கி மாவட்டத்தில் ஆட்சியராக பொறுப்பேற்றுள்ள விக்னேஸ்வரியை பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம் வரவேற்றுள்ளது.