அரியலூர் நகரில் நடிகர் விஜய் தனது அரசியல் பிரசாரத்தை மேற்கொண்டபோது, மக்கள் பெருமளவில் திரண்டு வரவேற்றனர். திருச்சியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தைத் தொடர்ந்து அரியலூரில் அண்ணா சிலை முன்பு வாகனத்தில் இருந்து மக்களை சந்தித்தார். மதியம் நடத்தப்பட வேண்டிய நிகழ்ச்சி தாமதமாகி இரவு எட்டு மணியளவில் தொடங்கியது.

மக்கள் முன் பேசிய விஜய், “உங்களின் அன்பும் பாசமும் எனக்குக் கிடைத்த மிகப் பெரிய செல்வம். நான் அரசியலுக்கு வந்து பணம் சம்பாதிக்க அல்ல, பாசிச பாஜக அரசையும் பாய்சன் திமுக அரசையும் கேள்வி கேட்கத்தான் வந்துள்ளேன். பொய்யான வாக்குறுதிகளைச் சொல்லி திமுக ஆட்சிக்கு வந்தது. 525 வாக்குறுதிகளில் எத்தனை நிறைவேற்றப்பட்டுள்ளன?” என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், “நான் மரியாதையோடு பேசினாலும், பாசமாகப் பேசினாலும் கூட தவறாக எடுத்துக் கொள்கிறார்கள். மக்களுக்காக உழைப்பதே என் நோக்கம். பெண்கள் பாதுகாப்பு, சட்டம், ஒழுங்கு ஆகியவற்றில் எங்களிடம் NO COMPROMISE. பேருந்தில் பெண்களுக்கு இலவச பயணம், மகளிர் உரிமைத் தொகை போன்றவை முழுமையாக செயல்படுத்தப்படவில்லை. ஆனால் எங்கள் கட்சி நடைமுறைக்கு சாத்தியமானவற்றையே வாக்குறுதியாக வழங்கும்” என்றார்.
அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் தேர்தலை ஜனநாயகப் போராகக் குறிப்பிட்ட விஜய், “திருச்சி என்றாலே திருப்புமுனை, அதுபோல அரியலூரும் நம் அரசியல் போராட்டத்தில் முக்கியமான மைல்கல் ஆகும்” என மக்களை உற்சாகப்படுத்தினார்.