திருச்சி: திருச்சி மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதவத்தூர் கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் இன்று (திங்கட்கிழமை) திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருச்சி மாநகராட்சியில் தற்போது 65 வார்டுகள் உள்ளன. இதை 100 வார்டுகளாக உயர்த்தும் வகையில் திருவெறும்பூர், மண்ணச்சநல்லூர், லால்குடி உள்ளிட்ட பல்வேறு வட்டங்களைச் சேர்ந்த 27 கிராம ஊராட்சிகளை மாநகராட்சியுடன் இணைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதில், அதவத்தூர் ஊராட்சியும் ஒன்று. அதவத்தூர், சுன்னம்புகாரன்பட்டி, பள்ளக்காடு, கொய்யாத்தோப்பு பாளையம், மேலப்பேட்டை, நெட்டச்சிக்காடு, நொண்டித்திருமண்காடு, தப்புக்கொட்டிக்காடு, அடைக்காடு, சீதக்காடு, குன்னையங்காடு, சந்தை, ஜே.ஜே.நகர், விநாயகபுரம் ஆகிய கிராமங்களை உள்ளடக்கியது இந்த கிராம ஊராட்சி. சுமார் 3,500 ஏக்கர் விவசாய நிலத்தில் மக்கள் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ளனர். இங்கு 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். எதிர்கால முன்னேற்றத்திற்கு பெரும் தடையாக இருக்கும் இந்த ஊராட்சியை மாநகராட்சியுடன் இணைக்கக் கூடாது என வலியுறுத்தி இக்கிராம மக்கள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் எம்.பி.சின்னதுரை மற்றும் கிராம பட்டயதாரர்கள் தலைமையில் பெண்கள் உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராம மக்கள் மனு அளிக்க வந்தனர். . கலெக்டர் அலுவலக வாயிலில் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி உள்ளே செல்ல முடியாதவாறு கதவுகளை அடைத்தனர். இதனால் ஆத்திரமடைந்த பெண்கள் உள்ளிட்ட கிராம மக்கள் ஆட்சியர் அலுவலகம் முன் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பலர் போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
கலெக்டருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதும், போதையில்லா தமிழகம் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வயலூர் சாலையில் உள்ள கல்லூரிக்கு ஆட்சியர் எம்.பிரதீப்குமார் மற்றும் அதிகாரிகள் சென்றிருந்தனர். கலெக்டர் உத்தரவின் பேரில், ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை, கலெக்டர் அலுவலக வளாகத்திற்குள் செல்ல போலீசார் அனுமதித்தனர். இதனால் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பெரும் பரபரப்பு காணப்பட்டது.