தஞ்சாவூர்: நடப்போம் நலம் பெறுவோம்” திட்டத்தின் கீழ் தஞ்சையில் 8 கி.மீ. தூர ஆரோக்கிய நடைப்பயிற்சியை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் மாதவன் தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு அரசின் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில் தொடங்கப்பட்ட “நடப்போம் நலம்பெறுவோம் ”என்கின்ற 8 கிலோ மீட்டர் தூரம் ஆரோக்கிய நடைபயிற்சி திட்டத்தினை மாதந்தோறும் முதல் ஞாயிறன்று தொடர்ந்து தஞ்சை அன்னை சத்தியா விளையாட்டு திடல் நடைபயிற்சியாளர் சங்கத்தினர் மாநகர சுகாதார துறையுடன் இணைந்து நடத்தி வருகின்றனர்.
அதன்படி இன்று (ஞாயிற்றுகிழமை) 16- வது மாதமாக 8 கிலோ மீட்டர் தூர ஆரோக்கிய நடைபயிற்சி மேற்கொண்டனர். இந்த நடைப்பயிற்சியை சத்யா விளையாட்டு திடல் நடைபயிற்சியாளர்கள் சங்க தலைவர் சீனிவாசன், பேராசிரியர் பாரி ஆகியோர் தலைமையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மாதவன் கொடியசைத்து தொடக்கி வைத்தார்.
மாநகர நல அலுவலர் நமச்சிவாயம், செயலாளர் ஜெயக்குமார் ,கண்ணாடி குமார், ஆசிரியர் கோவிந்தராஜ்,செந்தில்குமார், கார்த்தி,ஜெயபால் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றனர். நடைபயிற்சியில் இளைஞர்கள், மாணவர்கள், மகளிர் உள்ளிட்ட 150-க்கும் மேற்பட்டவர்கள் உற்சாகத்துடன் பங்கேற்று புதிய பஸ் நிலையம் வரை சென்று, மீண்டும் அதே வழியாக அன்னை சத்யா விளையாட்டு திடலை வந்தடைந்தனர்.
அடுத்த மாதம் முதல் நடைபயிற்சியில் பங்கேற்கும் அனைவருக்கும் பாராட்டு பரிசு வழங்கப்படும் என சங்கத்தினர் தெரிவி்த்தனர். தொடர்ந்து தஞ்சாவூர் மாநகராட்சி சுகாதார துறை சார்பில் அனைவருக்கும் உடல் பரிசோதனை செய்யப்பட்டது. நிறைவாக உடல்நலம், மனநலத்தை காக்கும் சுண்டல், தேநீர், தண்ணீர் பாட்டில் போன்றவை குமரன் ஜுவல்லரி முருகனால் வழங்கப்பட்டது. இளங்கோ நன்றி கூறினார்.