தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே திருக்கானூர்பட்டி பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள கடலையில் களை எடுக்கும் பணிகளில் விவசாயிகள் மும்முரம் காட்டி வருகின்றனர்.
தஞ்சாவூர் அடுத்த திருக்கானூர்பட்டி பகுதியில் நிலக்கடலை சாகுபடியில் விவசாயிகள் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகின்றனர்.தமிழகத்தின் நெற்களஞ்சியமாக தஞ்சை மாவட்டம் விளங்கி வருகிறது. நெல் மட்டுமின்றி கரும்பு, உளுந்து, எள், மக்காச்சோளம், நிலக்கடலை, வாழை, வெற்றிலை, கீரை, காய்கறிகள் சாகுபடியிலும் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்
தஞ்சாவூர் பகுதியில் நிலக்கடலை மார்கழி, சித்திரை என 2 பட்டங்களில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. விருத்தாச்சலம் 10, நாட்டுக்கடலை, குஜராத் ஜி.7, ஆந்திரா நிலக்கடலை உள்ளிட்ட பல ரகங்கள் சாகுபடி செய்யப்படுகிறது. தற்போது கார்த்திகை, மார்கழி பட்டத்தில் விதைத்த நிலக்கடலை 20 நாட்களில் ஒருமுறையும், 45 நாட்களில் மறுமுறையும் களை எடுக்க வேண்டும்.
தஞ்சை மாவட்டம் திருக்கானூர்பட்டி, சூரக்கோட்டை, மடிகை, காட்டூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தற்போது நிலக்கடலையில் 2வது களை எடுக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. 100 நாட்களுக்கு பின்னர் அறுவடை செய்யப்படும். கடந்த 3 வாரத்திற்கு முன்பு பெய்த மழை கடலை சாகுபடி விவசாயிகளுக்கு உதவிகரமாக இருந்தது. தற்போது செடிகள் நன்கு வளர்ந்துள்ள நிலையில் களை எடுக்கும் பணிகளில் விவசாயிகள் மும்முரம் காட்டி வருகின்றனர்.