சென்னை: பிறந்த குழந்தைகள் தாய்ப்பால் அருந்துவது அவர்கள் ஆரோக்கியமாக வளரப் போதிய சத்துக்களைத் தரும் என்பது அசைக்க முடியாத உண்மை. சுகப் பிரசவமோ அல்லது அறுவைசிகிச்சை பிரசவமோ, பிறந்த குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுப்பது தாய்மார்களின் மிக முக்கியமான கடமையாகும். தாய்ப்பாலில் மட்டுமே ஒரு குழந்தைக்குத் தொற்று நோய்கள் வராமல் தடுப்பதற்கான அத்தனை நோய் எதிர்ப்பொருள்களும் நிரம்பி உள்ளன.
அனைத்து தாய்மார்களும் தங்கள் குழந்தைகளுக்குத் தாய்ப்பால் தர முடியுமா என்று கேட்டால் அது சற்று சிந்திக்க வேண்டிய கேள்வியாகவே இருக்கும். தாய்ப்பால் கொடுக்க முடியாத பெண்கள் அதற்கான காரணத்தைச் சரியாகக் கண்டறிந்து தன் குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்க முயற்சிகளை எடுக்க வேண்டும். ஒரு சில தாய்மார்களுக்கு என்ன முயன்றாலும் தாய்ப்பால் தரமுடியாமல் போகலாம். எனினும் அத்தகைய பெண்கள் சற்று சிரமம் பார்க்காமல் சில எளிய உணவுகளை தொடர்ந்து சாப்பிடும் போது அவர்களாலும் நிச்சயம் தாய்ப்பால் கொடுக்க முடியும்.
பெருஞ்சீரகம் தாய்ப்பாலை அதிகரிக்கப் பெரிதும் உதவுகிறது. இது ஈஸ்ட்ரோஜன் அளவை சீர்படுத்த உதவுகிறது. பெருஞ்சீரகம் கொண்டு நீங்கள் தேநீர் கூடத் தயாரித்துக் குடிக்கலாம். தண்ணீரில் பெருஞ்சீரகத்தைப் போட்டு நன்கு கொதிக்க விட்ட பின் அதில் தேனை விட்டுப் பருகி வந்தால் தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்.
வெந்தயம் தாய்ப்பாலின் அளவை அதிகரிக்க உதவும். இது உடல் சூட்டைத் தனிப்பதோடு ஈஸ்ட்ரோஜன் அளவையும் அதிகப் படுத்தும். ஒரு தேக்கரண்டி வெந்தயத்தை எடுத்து நீரில் நன்கு கொதிக்க விட்டு, அதில் ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்துப் பருகி வந்தால் ஓரிரு நாட்களில் நீங்கள் தாய்ப்பாலின் அளவு அதிகரிப்பதை உணரலாம்.
போதிய தாய்ப்பால் இல்லாமல் இருக்கும் பெண்கள் இலவங்கப்பட்டையை அதிகம் எடுத்துக் கொள்வதால் தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும். சிறிது இலவங்கப்பட்டையை எடுத்துக் கொண்டு சுடு தண்ணீரில் போட்டு தேன் கலந்து பருகி வர, தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்.
பனைமரங்களிலிருந்து கிடைக்கப் பெறும் கருப்பட்டிகள் அற்புத மருத்துவ குணங்கள் கொண்டன. குறிப்பாகச் சுக்கு மற்றும் மிளகு கலந்த கருப்பட்டியை தினம் சிறிதளவு உடைத்து உண்பதால் தாய்ப்பால் நன்றாகச் சுரக்கத் தொடங்கும். கூடுதலாகக் கருப்பட்டியில் இரும்புச் சத்து நிறைந்துள்ளதால் இரத்த சோகை வியாதி தாய்மார்களைத் திரும்பிக் கூடப் பார்க்காது.