கடலூர்: பள்ளி வேன் மீது ரெயில் மோதிய விபத்தில் நடந்தது என்ன என்பது குறித்து தென்னக ரெயில்வே விளக்கம் அளித்துள்ளது.
கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே பள்ளி வேன் மீது ரெயில் மோதியதில் 2 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ரெயில் மோதியதுடன் பள்ளி வேன் 50 மீட்டர் தூரத்திற்கு இழுத்துச்சென்றதால் வேன் சுக்குநூறானது.
ரெயில் விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு மாவட்ட ஆட்சியர், எஸ்.பி.ஜெயக்குமார், ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.
இதனிடையே, கேட் கீப்பர் கேட்டை மூடாமல் தூங்கியதால் பள்ளி வேன் மீது ரெயில் மோதி விபத்து ஏற்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் ரெயில் விபத்துக்கு பள்ளி வேன் ஓட்டுநரே காரணம் என தென்னக ரெயில்வே தெரிவித்துள்ளது.
கேட்டை மூடத் தொடங்கியபோது, வேன் ஓட்டுநர் வேனை கேட்டை கடக்க அனுமதிக்க கோரியதாக தகவல் வெளியாகி உள்ளது. வேன் ஓட்டுநர் கோரியிருந்தாலும் கேட் கீப்பர் வாகனத்தை அனுமதித்திருக்க கூடாது என தென்னக ரெயில்வே கூறியுள்ளது.
இதனிடையே ரெயில்வே கீப்பர் பங்கஜ் சர்மாவை சஸ்பெண்ட் செய்து தென்னக ரெயில்வே நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.