சென்னை: தமிழக விவசாயிகள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு, தமிழ்நாடு நதிகள் வள மீட்பு இயக்கம், உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில், தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் பங்கேற்ற கூட்டம், சென்னை எழும்பூரில் நடந்தது.
விவசாய விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயம் மற்றும் நீர் மேலாண்மை குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு ஒருங்கிணைப்பாளர் டி.குருசாமி முன்னிலையில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு விவசாயிகள் சங்கத்தின் தேசியத் தலைவர் வி.எம். சிங், குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயம் செய்ய வலியுறுத்தி வருகிறார்.
பல்வேறு விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள், நீர்வளத்துறை வல்லுநர்கள் கலந்துகொண்டனர். கூட்டத்தின் முடிவில் வி.எம். சிங் நிருபர்களிடம் கூறியதாவது:- போதிய தண்ணீர் இன்மை மற்றும் விளைபொருட்களுக்கு நல்ல விலை கிடைக்காதது விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு பெரும் சவாலாக உள்ளது. இதற்கு தகுந்த தீர்வு காணும் நோக்கில், பல்வேறு மாநில விவசாய பிரதிநிதிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
இக்கூட்டத்தில், விவசாயிகளின் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்ய தேசிய சட்டம் இயற்ற வேண்டும் என்றும், அதை அமல்படுத்த மாநிலங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், தமிழகத்தில் உள்ள 47 ஆற்றுப்படுகைகளை மேம்படுத்த வேண்டும். மாநிலம் முழுவதும் மன்னர் காலத்தில் இருந்த 39,000 ஏரிகளை சீரமைத்து, இந்த நிதியாண்டிலேயே சுமார் 200 டிஎம்சி தண்ணீரை சேமிக்கும் வகையில் மாஸ்டர் பிளான் ஒன்றை அரசு செயல்படுத்த வேண்டும்.
இதேபோல், 100 நாள் வேலை திட்டத்தை திருத்தியமைத்து, அந்த தொழிலாளர்களை விவசாய பணியிலும், நிலத்தடி நீர் மேலாண்மை பணியிலும் ஈடுபட அனுமதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதை முன்னெடுத்துச் செல்ல, தமிழ்நாடு சிவில் சமூக அமைப்பை உருவாக்கியுள்ளோம். இதில் 140 பொதுக்குழு உறுப்பினர்களும், 25 செயற்குழு உறுப்பினர்களும் இடம்பெற்றுள்ளனர்.
விவசாயிகளின் கோரிக்கைகளை அரசு மற்றும் அரசியல்வாதிகளிடம் வலியுறுத்தாமல், அதை செயல்படுத்த விவசாயிகளுக்கு அதிகாரம் அளிக்க நடவடிக்கை எடுப்பது குறித்தும் ஆலோசித்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார். மகாராஷ்டிர மாநில கரும்பு விவசாயிகள் சங்கத் தலைவர் ராஜு ஷெட்டி, தேசிய விவசாயிகள் சங்கத் தலைவர் சஞ்சய்நாத் சிங், பாரதிய கிசான் சங்கத் தலைவர் பால்ராஜ் பாட்டீல், மகளிர் சங்கத் தலைவர் ரேகா சிவால் உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.