சென்னை: வேளச்சேரி-பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை வரும் 2025-ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் செயல்படத் தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், ரயில் போக்குவரத்து சேவையை அதிகரிக்கவும் பறக்கும் ரயில் திட்டம் 1985ல் முடிவு செய்யப்பட்டது. இத்திட்டம் சென்னை கடற்கரை முதல் பரங்கிமலை வரை 3 கட்டங்களாக செயல்படுத்த திட்டமிடப்பட்டது.
முதற்கட்டமாக 1997-ம் ஆண்டு கடற்கரை – மயிலாப்பூர் இடையே 9 கி.மீ தூரத்திற்கு ₹266 கோடி செலவில் கட்டப்பட்டது. இரண்டாவது கட்டமாக மயிலாப்பூரில் இருந்து வேளச்சேரி வரை ₹877.59 கோடியில் பணிகள் தொடங்கப்பட்டு 2007-ம் ஆண்டு நிறைவடைந்தது. அதை தொடர்ந்து வேளச்சேரி-பரங்கிமலை இடையே ₹495 கோடியில் மூன்றாம் கட்ட பணிகள் கடந்த 2008-ம் ஆண்டு தொடங்கியது.

மொத்தம் 5 கிலோமீட்டர் நீளமுள்ள ரயில் பாதை 167 தூண்களுடன் 4.5 கிலோமீட்டர் தூரத்திற்கு அமைக்கப்பட்டது. இந்நிலையில் ஆதம்பாக்கம், தில்லை கங்கா நகர் பகுதிகளில் நிலம் கையகப்படுத்துவதை எதிர்த்து சிலர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதனால் ஆதம்பாக்கம்-பரங்கிமலை இடையே மீதமுள்ள அரை கிலோ மீட்டர் தூரத்திற்கான பணிகள் பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டது.
2010-ல் திட்டமிட்டபடி பணிகள் முடிக்க முடியாததால், திட்ட மதிப்பீடு அதிகரிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நிலம் கையகப்படுத்துவதற்கு நீதிமன்றம் மூலம் சமரசம் செய்து பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதற்கு முன்பே பருத்திவாக்கம் மற்றும் ஆதம்பாக்கம் ஆகிய இடங்களில் ரயில் நிலையங்கள் கட்டப்பட்டன. இங்கு ரயில்வே சிக்னல் கட்டமைப்புகளும் கட்டி முடிக்கப்பட்டன.
எஞ்சிய பகுதியில் தூண்கள் அமைத்து அதன் மீது தண்டவாளங்கள் அமைக்கும் முதற்கட்ட பணி நடைபெற்றது. அப்போது, அங்கு அமைக்கப்பட்டிருந்த தூண்களில் கட்டப்பட்டிருந்த ரயில் பாலம் திடீரென இடிந்து, பாரம் தாங்க முடியாமல் கீழே விழுந்து விபத்து ஏற்பட்டது. அதன்படி, பல்வேறு பிரச்னைகள், எதிர்ப்புகளுக்குப் பிறகு, 16 ஆண்டுகளுக்குப் பிறகு 5 கிலோமீட்டர் பறக்கும் ரயில் பாதை அமைக்கும் பணி நிறைவடைந்தது. அதன்படி, 2025 மார்ச்சில் பறக்கும் ரயில் சேவை திட்டம் செயல்பாட்டுக்கு வர உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் மேலும் கூறியதாவது:- வேளச்சேரியில் இருந்து ஆதம்பாக்கம் வரையிலான 5 கி.மீ., தூரத்துக்கு ₹734 கோடியில் பணிகள் நடந்தன. . ஆனால், அரை கிலோ மீட்டர் தூரத்துக்கு ₹30 கோடி செலவில் பணி நடந்தது. இந்த ரயில் பாதை கடற்கரையிலிருந்து தாம்பரம் வரையிலான புறநகர் மின்சார ரயில் பாதையில் அமைந்துள்ளது. இதையடுத்து இத்திட்டத்தில் பருத்திவாக்கம், ஆதம்பாக்கம், வாணுவம்பேட்டை ஆகிய இடங்களில் ரயில் நிலையங்கள் அமைக்கும் பணி முடிவடைந்து ரயில்கள் இயக்க தயாராக உள்ளன.
இதில், ஆதம்பாக்கம், தில்லை கங்கா நகர் பகுதிகளில் ராட்சத தூண்களுடன், 4.5 கி.மீ., தூரத்துக்கு, 167 தூண்கள் அமைக்கப்பட்டு, மேம்பாலம் இணைக்கும் பணி முடிந்துள்ளது. ஆதம்பாக்கம், தில்லை கங்கா நகர் பகுதியில் ஏற்கனவே 250 மீட்டர் தூரத்திற்கு 28 துணை பாலங்கள் கட்டப்பட்ட நிலையில் மொத்தம் 36 துணை பாலங்கள் நிறுவப்பட்டுள்ளன. மேலும், ரயில் நிலையங்கள் அமைக்கும் பணி நிறைவடைந்து, வரும் 2025-ம் ஆண்டு மார்ச் மாதம் இத்திட்டம் முழுமையாக முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
பரங்கிமலை முக்கிய ரயில் முனையம் ஆகும் மேலும், சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்தில், மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வழித்தடம் பரங்கிமலை ரயில் நிலையம் வழியாக செல்கிறது. இதற்கான ரயில் பாதை தற்போது அமைக்கப்பட்டுள்ள வேளச்சேரி உயர்மட்ட ரயில் பாதைக்கு மேல் உயரத்தில் அமைக்கப்படும். எனவே, பார்ப்பதற்கு அருமையாக இருக்கும். மேலும், பரங்கிமலை ரயில் நிலையம், உயர்மட்ட ரயில், கடற்கரை – தாம்பரம் ரயில் மற்றும் மெட்ரோ ரயில் மூலம் பயணிக்கும் முக்கிய முனையமாக மாறும்.