கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் உள்ள முக்கிய சுற்றுலா தலமாக பேரிஜம் ஏரி உள்ளது. இந்த இடம் வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளதால், தினமும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை அனுமதி வழங்கி வருகிறது. பேரிஜம் ஏரி பகுதியில் கடந்த சில நாட்களாக காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன.
இதன் காரணமாக வனத்துறை அலுவலகத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு கடந்த இரண்டு நாட்களாக பேரிஜம் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. வனத்துறை சார்பில் முறையான அறிவிப்பு வெளியிடப்படாததால், பேரிஜம் ஏரி பகுதிக்கு உள்ளூர் வாகன ஓட்டிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் செல்ல முடியாமல் தவிக்கின்றனர்.

பேரிஜம் ஏரி பகுதியில் காட்டு யானைகள் முகாமிடும் போது வனத்துறையினர் இதை முறைப்படுத்தி உரிய அறிவிப்பை வெளியிட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. யானைகள் இப்பகுதியை விட்டு வேறு பகுதிக்கு சென்றால் மட்டுமே பேரிஜம் வனப்பகுதிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதிக்கப்படுவர்.
தற்போது மாதத்திற்கு ஒருமுறை அல்லது இரண்டு முறை யானைகள் இப்பகுதிக்கு வருவது வாடிக்கையாகி வருகிறது. யானைகளின் நடமாட்டம் தினமும் கண்காணிக்கப்பட்டு வருவதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.