தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே அரசுப் பேருந்து ஓட்டுநரைத் தாக்கிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர்.
பேராவூரணியிலிருந்து ராமேஸ்வரத்திற்கு வியாழக்கிழமை காலை சேதுபாவாசத்திரம் வழியாக அரசுப் பேருந்து சென்று கொண்டிருந்தது. பேருந்தை ஓட்டுநர் மணிவண்ண பாண்டியன் என்பவர் இயக்கினார். தொலைதூரம் செல்லும் பேருந்து என்பதால் குறிப்பிட்ட நிறுத்தங்களில் மட்டும் நின்று செல்லும் பேருந்தை, நிறுத்தம் இல்லாத மருங்கப்பள்ளம் என்ற இடத்தில் வாலிபர் ஒருவர் கைநீட்டி நிறுத்தச் சொல்லியுள்ளார்.
நிறுத்தம் இல்லாத இடம் என்பதால் பேருந்தை ஓட்டுநர் நிறுத்தாமல் சென்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த வாலிபர் மோட்டார் சைக்கிளில் துரத்திச் சென்று மருங்கப்பள்ளம் – ஊடையக்காடு சாலை அருகே பேருந்தை வழிமறித்து, ஓட்டுநரை தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த ஓட்டுநரை அருகில் உள்ளவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பேராவூரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இதுகுறித்து புகாரின் பேரில் சேதுபாவாசத்திரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அரசுப் பேருந்து ஓட்டுநரைத் தாக்கிய மருங்கப்பள்ளம் பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்த அருண் பாண்டியன் (27) என்பவரை கைது செய்து பேராவூரணி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.