கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயிலின் குடமுழுக்கு விழா பிப்ரவரி 10ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனால், பேரூர் தாலுகாவில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

குடமுழுக்கு விழாவை முன்னிட்டு பிப்ரவரி 7ஆம் தேதி முதல் யாக பூஜைகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. விழாவிற்காக 60 யாகசாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த விழா நாளை காலை 9.15 மணி முதல் 10.15 மணிக்குள் நடைபெறும். கோவில் விழாவை முன்னிட்டு பேரூர் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதிகாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை பேரூர் சாலையில் வாகனங்களின் இயக்கம் மாற்றம் செய்யப்படும். தொண்டாமுத்தூர், ஆலந்துறை, மாதம்பட்டி, செம்மேடு, பூண்டி, காருண்யா நகர் போன்ற பகுதிகளில் இருந்து பேரூர் செல்லும் வாகனங்கள் கோவைபுதூர் மெயின் ரோடு வழியாக மாற்றப்படும்.
காந்திபுரம், ரயில்வே ஸ்டேஷன், டவுன்ஹால் பகுதிகளில் இருந்து பேரூர் நோக்கி வரும் வாகனங்கள் செல்வபுரம் சிவாலயா பஸ்ஸ்டாப் அருகே சுண்டக்காமுத்தூர் மெயின் ரோடு வழியாக திருப்பி விடப்படும். இந்த போக்குவரத்து மாற்றம் பெரும் நெரிசலை தவிர்க்கவும், பொதுமக்கள் சிரமமின்றி நிகழ்வில் கலந்துகொள்ளவும் எடுக்கப்பட்ட நடவடிக்கையாகும்.