மாமல்லபுரம்: மாமல்லபுரம் என்பது தமிழகத்தின் காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு பழங்கால துறைமுக நகரமாகும். இது சென்னைக்கு அருகிலுள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது. மாமல்லபுரத்தில் நாம் பார்க்க வேண்டிய முக்கியமான இடங்களை குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம்.
கடற்கரைக் கோயில்
இது திராவிட கட்டடக்கலையின் சிறந்த எடுத்துக்காட்டாகும். இரவிலும் இக்கோயிலை காணும் வகையில் இக்கோயிலில் பிரகாசமான விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. அலைவாய்க் கரையில் அமைந்துள்ளதால் இரவின் மின் ஒளியில் பார்ப்பதற்கு மிக அழகாகக் காட்சியளிக்கின்றன.
குகைக் கோயில்கள்
குகைக் கோயில்கள் கோனேரி மண்டபம், மஹிசாசுரமர்த்தினி குகை, வராக மண்டபம், ஆதி வராஹ மண்டபம், திருமூர்த்தி குகை, மற்றும் கிருஷ்ண மண்டபம் குறிப்பிடத்தக்க குகை கோயில்களாகும்.
கிருஷ்ணனின் வெண்ணை உருண்டை
மலையின் சரிவில் உள்ள மிகப்பெரிய கல்லிற்கு கண்ணனின் வெண்ணை என பெயரிட்டுள்ளனர். இது எந்த ஒரு பிடிமானம் இல்லாமல் இருப்பது போன்று தோற்றமளிக்கிறது.
அர்ஜுனன் தபசு
இந்த இடம் தான் மாமல்லபுரத்தில் மிகவும் தொன்மையான இடம். இங்கு இருக்கும் கங்கை கீழே இறங்கி வருவது போன்ற சிற்பமும் அர்ஜுனன் தவம் புரியும் சிற்பமும் இந்த இடத்தின் அழகை மேலும் கூட்டுகின்றன.
பஞ்ச ரதங்கள்
மாமல்லபுரத்தில் பஞ்சபாண்டவ இரதம் எனப்படும் ஐந்து இரதங்கள், வலையன்குட்டை இரதம், பிடாரி இரதங்கள் எனப்படும் இரு இரதங்கள், கணேச இரதம், தர்மராஜ ரதம், பீம ரதம் என பல்வேறு இரதங்கள் உள்ளன.
மஹிசாசுரமர்த்தினி குகை
மஹிசாசுரமர்த்தினி குகை மிகவும் துல்லியமாக செதுக்கப்பட்ட ஒரு அற்புதமான குகைக் கோயிலாகும். இதில் ஒருபுறம் மகிஷாசுரமர்த்தினி மகிஷாசுரனை வதம் செய்யும் காட்சியும் மறுபுறம் விஷ்ணு பகவான் பள்ளி கொண்டிருக்கும் காட்சியும் மிக நேர்த்தியான முறையில் காண்போரை கவரும் வகையில் செதுக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ண மண்டபம்
இது ஸ்ரீ கிருஷ்ணரின் சிறப்பு தொகுப்பாக உள்ளது. இதில் அவர் காத்தருளும் உயிர்களான மனிதர்கள், புல், பூச்சி, இனங்கள் செதுக்கப்பட்டுள்ளன.