நாட்டின் செப்டம்பர் மாத சில்லறை விலை பணவீக்கம் அதிகரிப்பு மற்றும் ரிலையன்ஸ் குழுமத்தின் நிகர லாபம் சரிவு போன்ற காரணங்களால் இந்திய பங்குச்சந்தை குறியீடுகள் வாரத்தின் இரண்டாவது வர்த்தக நாளான நேற்றைய தினம் குறைந்த அளவிலேயே முடிவடைந்தன.
ஆரம்ப வர்த்தகத்தில் சந்தை குறியீடுகள் உயர்வுடன் துவங்கின. தொடர்ந்து முதலீட்டாளர்கள் பங்குகளை விற்று லாபத்தை பதிவு செய்து, சரிவை முடிவுக்கு கொண்டு வந்தனர். நேற்றைய கச்சா எண்ணெய் விலை சரிவு இந்தியாவுக்கு சாதகமாக இருந்தாலும், பணவீக்க விவரம் கவலைக்கிடமாக இருப்பதால் முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்குவதில் எச்சரிக்கையாக இருந்தனர்.
நிஃப்டி குறியீடுகளைப் பொறுத்தவரை, ரியல் எஸ்டேட், மீடியா மற்றும் வங்கித் துறை பங்குகள் லாபம் அடைந்தன. உலோகம், ஆட்டோமொபைல் மற்றும் மின் உற்பத்தி பங்குகள் சரிந்தன. சென்செக்ஸில், ரியல் எஸ்டேட் பங்குகள் ஏற்றம் கண்டன. உலோகப் பங்குகள் சரிந்தன.
வெளிநாட்டு முதலீட்டாளர்கள் நேற்று ரூ.1,749 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்றுள்ளனர். உலகளாவிய கச்சா எண்ணெய் விலை நேற்று 4.71 சதவீதம் குறைந்து ஒரு பீப்பாய்க்கு 73.81 அமெரிக்க டாலராக இருந்தது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 1 பைசா உயர்ந்து ரூ.84.04 ஆக வர்த்தகமாகிறது. பிபிசிஎல், ஐசிஐசிஐ வங்கி, பார்தி ஏர்டெல், பிரிட்டானியா மற்றும் ஏசியன் பெயிண்ட் ஆகியவை அதிக லாபம் ஈட்டிய முதல் 5 நிஃப்டி 50 பங்குகள். ஹெச்டிஎப்சி, லைஃப், விப்ரோ, பஜாஜ் ஆட்டோ, பஜாஜ் ஃபைனான்ஸ், ஹிண்டால்கோ ஆகியவை அதிகம் சரிந்தன.