பாகிஸ்தானின் பல இடங்களில் இந்திய ராணுவம் வான் பாதுகாப்பு ரேடார்களையும் அமைப்புகளையும் குறிவைத்து அழித்ததை அடுத்து இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது. இந்த சூழ்நிலையில், மும்பை பங்குச் சந்தையில் நேற்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் 412 புள்ளிகள் சரிந்து 80,334 புள்ளிகளில் நிறைவடைந்தது.
நிஃப்டி-50 குறியீடு 141 புள்ளிகள் சரிந்து 24,273 புள்ளிகளில் நிறைவடைந்தது. பிஎஸ்இ மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் குறியீடுகள் முறையே 1.90% மற்றும் 1.05% சரிந்தன. பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட பங்குகளின் ஒட்டுமொத்த சந்தை மதிப்பு சரிந்ததால் முதலீட்டாளர்கள் நேற்று ஒரே வர்த்தக நாளில் ரூ. 5 லட்சம் கோடியை இழந்தனர். செவ்வாய்க்கிழமை ரூ. 423.50 லட்சம் கோடியாக இருந்த பங்குகளின் சந்தை மூலதனம் நேற்று ரூ. 418.50 லட்சம் கோடியாகக் குறைந்தது.

இந்திய ராணுவத்தின் ஆபரேஷன் சிந்தூரைத் தொடர்ந்து பாகிஸ்தான் பங்குச் சந்தைகள் கூர்மையான சரிவைக் காண்கின்றன. நேற்றைய வர்த்தகத்தில் KSE-30 7% வரை சரிந்தது. KSE-100 குறியீடு 7,000 புள்ளிகள் வரை சரிந்து முதலீட்டாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. புதன்கிழமை 3,559 புள்ளிகள் சரிந்து 1,10,009 ஆக இருந்த KSE-100, நேற்று 6,948 புள்ளிகள் அதாவது 6.32 சதவீதம் சரிந்து 1,03,060 ஆக சரிந்தது.