சென்னை: பொது சட்ட நுழைவுத் தேர்வான CLAT-இல் மாநில அளவில் முதலிடம் பிடித்து, தேசிய சட்ட பல்கலைக்கழகத்தில் சேர தகுதி பெற்றுள்ள முதன்மை பழங்குடியின மாணவர் பரத்தை, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பாராட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார். தனது சமூக வலைதளப் பதிவில், “தம்பி பரத் சட்டம் பயின்று அந்த அறிவொளியை இந்தச் சமூகத்திற்கு வழங்க வேண்டும். அதற்குத் திமுக துணை நின்று வழிநடத்தும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

திருச்சி மாவட்டம் பச்சமலைத்தோனூர் மலைக் கிராமத்தைச் சேர்ந்த பரத், CLAT தேர்வில் வெற்றி பெற்று தமிழக அளவில் முதல் இடம் பிடித்துள்ளார். இதன் மூலம், அவர் தமிழ்நாடு தேசிய சட்ட பல்கலைக்கழகத்தில் சேரும் தகுதியைப் பெற்றுள்ளார். இது மட்டுமல்லாமல், அந்த பகுதியில் இருந்து இந்த சட்ட நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற முதல் பழங்குடியின மாணவர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
பரத்தின் சாதனை குறித்து அவரது தந்தை செல்வக்குமார் பேசும்போது, “பரத்தின் தாய் 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். மக்களுக்கு சேவை செய்ய வேண்டுமெனும் ஆசையுடன் நான் அவரை சட்டம் படிக்க வைக்கத் தீர்மானித்தேன். அவரது படிப்பு மக்களுக்கு பயனளிக்கும் என்பதில் நம்பிக்கை இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
பரத் கூறுகையில், “எங்கள் பச்சமலை பகுதியில் யாரும் சட்டம் படிக்கவில்லை. நான் தான் முதல் முறையாக வக்கீலாக பயிலப் போகிறேன். இது என்னுடைய கனவுமட்டுமல்ல, சமூகத்தின் எதிர்பார்ப்பும்” என தெரிவித்துள்ளார். பரத்தின் இந்த நேர்மையான கருத்தும், சாதனையும் சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், முதல்வரின் கவனத்திற்குத் சென்றது.
இதைப் பகிர்ந்த ஸ்டாலின், “உள்ளம் உவகையில் நிறைகிறது. தம்பி பரத் தன்னுடைய அறிவை சமூக நலனுக்காக பயன்படுத்த வேண்டும். அவரின் கல்வி பயணத்தில் திமுக சட்டப் பிரிவும், செயலாளர் என்.ஆர். இளங்கோவும் முழுமையாக துணை நின்று வழிகாட்டுவார்கள்” என உறுதியளித்துள்ளார்.
சமீபத்தில், சேலம் கல்வராயன்மலை பகுதியில் வாழும் பழங்குடியின மாணவி ராஜேஸ்வரி, JEE Advanced தேர்வில் வெற்றி பெற்று IIT-யில் சேரும் வாய்ப்பைப் பெற்றிருந்தார். அவரது தந்தை கடந்த ஆண்டு புற்றுநோயால் இறந்திருந்த நிலையில், அவரது கனவுகளை நனவாக்கிய ராஜேஸ்வரியின் கல்விச் செலவுகளை அரசே மேற்கொள்வதாக முதலமைச்சர் அறிவித்ததும் குறிப்பிடத்தக்கது.
பரத்தின் சாதனை, சமூக வளர்ச்சியில் கல்வியின் பங்கு என்ன என்பதை மீண்டும் நினைவூட்டும் வகையில் உள்ளது. இவனது பயணம், தமிழகத்தின் பிற மாணவர்களுக்கும் புதிய ஆதர்சம் ஏற்படுத்தும் எனக் கணிக்கப்படுகிறது.