தஞ்சாவூர்: உணவு பதப்படுத்துதல் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய உணவு தொழில்நுட்பம், தொழில் முனைவு மற்றும் மேலாண்மை நிறுவனத்தின் இளநிலை, முதுகலை மற்றும் முனைவர் பட்டதாரி மாணவர்களுக்கான 3வது பட்டமளிப்பு விழா நடந்தது.
நிகழ்ச்சியில் உணவு பதப்படுத்தும் தொழில் துறை மத்திய அமைச்சர் சிராக் பஸ்வான் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு பதக்கங்களை வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது: நெல் உற்பத்திக்கு பெயர் பெற்ற வளமான காவிரி டெல்டாவில் அமைந்துள்ள நிப்டம் இந்தியாவின் உணவுத் தொழில் மேம்பாட்டுக்கு ஆதரவாக உள்ளது. உணவு தொழில்நுட்ப ஆராய்ச்சி மூலம் மேம்படுத்தப்பட்ட மற்றும் பாதுகாப்பான உணவுகளை தயாரிப்பதிலும் தொழில் முனைவோருக்கு பயிற்சி அளிப்பதிலும் முக்கிய பங்காற்றி வருகிறது. உலகின் பெரிய பொருளாதாரமாக இந்தியா விளங்கி வருகிறது. உணவு பதப்படுத்தும் தொழில் விவசாயத்தையும், தொழில்துறையையும் இணைத்து விவசாயிகளின் மேம்பாட்டிற்கும் நுகர்வோர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதற்கும் உதவுவதாக அமைய வேண்டும்.
மத்திய அரசு 2025-26ம் ஆண்டிற்கான பட்ஜெட்டில் மற்றொரு நிப்டம் நிறுவனம் உருவாக்க நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. அதிநவீன ஆராய்ச்சி மூலம் உணவு தொழில்துறை வளர்ச்சிக்கு நிறுவனங்களின் வலுவான கூட்டமைப்பு, எதிர்காலத்திற்குத் தேவையான உணவு சுற்றுச்சூழல் அமைப்பதே மத்திய அரசின் நோக்கம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
நிப்டம் நிர்வாகக் குழு தலைவர் முனைவர் சோதி முதுகலை பட்டதாரி மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி பேசுகையில், இந்தியாவில் தற்போது உட்கொள்ளும் உணவின் மொத்த மதிப்பு ஆண்டுக்கு சுமார் ரூ. 60 லட்சம் கோடி. இந்த மதிப்பு 2033ல் ரூ.100 லட்சம் கோடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே உணவு தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு அதிக வாய்ப்புகள் ஆராய்ச்சியிலும், மேலாண்மை வளர்ச்சியிலும் இருக்கிறது. மதிப்பு கூட்டல் துறையில் வளர்ச்சி விகிதம் அதிகமாக உள்ளது மதிப்பு கூட்டும் தொழில்நுட்பம் அந்த உணவை உற்பத்தி செய்யும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்துகிறது என்று தெரிவித்தார்.
நிஃப்டம் இயக்குநர் முனைவர் பழனிமுத்து இளநிலை பட்டதாரி மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி பேசுகையில், இந்த கல்வியாண்டில் இந்நிறுவனமானது உணவு பதன்செய் துறையில் 20க்கும் மேற்பட்ட தொழில் நுட்பங்களை கண்டுபிடித்து வெற்றிகரமாக தொழில்துறைகளுக்கு மாற்றப்பட்டுள்ளன. முக்கியமாக இந்த நிறுவனம் 5 இந்திய காப்புரிமைகளை உபகரணங்கள், தயாரிப்பு மற்றும் செயல்முறை மேம்பாடு பிரிவில் பெற்றுள்ளது. இந்த ஆண்டில் நிப்டம் ஏற்பாடு செய்த பல்வேறு திறன் வளர்ப்பு மற்றும் திறன் மேம்பாடு பயிற்சி நிகழ்ச்சிகள் மூலம் சுமார் 4,600 பேர் பங்கேற்று பயனடைந்தனர் என்று தெரிவித்தார். இந்த பட்டமளிப்பு விழாவில் கல்வியில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்கள், இளநிலை முடித்த 60 பேர், முதுகலை முடித்த 28 பேர், உணவுத் தொழில்நுட்பத்தில் முனைவர் பட்டம் முடித்த 2 பேர் என மொத்தம் 90 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. பதிவாளர் பொறுப்பு முனைவர் சண்முகசுந்தரம் நன்றி கூறினார்.
முன்னதாக மத்திய அமைச்சர் சிராக் பஸ்வான் நிப்டம்-ன் உணவு பதப்படுத்தும் வணிக தொழிற்பயிற்சி மையத்தை திறந்து வைத்தார். நிகழ்ச்சிக்கு பின்னர் மத்திய அமைச்சர் சிராக் பஸ்வான் நிருபர்களிடம் கூறியதாவது:
உலகின் மிக இளமையான பொருளாதார நாடு இந்தியா. இதில் 65 சதவீத மக்கள் தொகை உள்ளது. உங்களுடைய கண்டு பிடிப்புகள் மற்றும் சாதனைகள் தேசிய அளவில் நின்று விடாமல் உலக அளவில் முத்திரை பதிக்க வேண்டும். அதற்கு உங்களுடைய கண்டுபிடிப்புகள் ஒவ்வொரு வீட்டில் உள்ள உணவு மேஜை மீது இருக்குமாறு செய்ய வேண்டும். இதில் உங்களுடைய பாரம்பரிய சுவையை மேம்படுத்தி வெற்றி காண வேண்டும். இதனை செயல்படுத்த சிறந்த உறுதி மற்றும் செயலாக்கம் செய்ய வேண்டும். சாதிவாரி கணக்கெடுப்புக்கு நானும், எனது கட்சியும் ஆதரவு தெரிவிக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.