சென்னை: சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி ஏமாற்றுகின்றனர் என்று எருமசாணி விஜயகுமார் மீது நடிகை அனுகிரகா குற்றம் சாட்டியுள்ளார்.
அடிபொலி என்ற படத்தின் மூலம் பிரபலமானவர் அனுகிரகா எஸ்.நம்பியார். தற்போது ரிசார்ட் என்ற வெப் தொடரில் ஸ்ரீநிதி என்ற கதாபாத்திரத்தில் அனுகிரகா நடிக்கிறார்.
இந்த தொடரில் கதாநாயகனாக எருமசாணி யூடியூப் மூலம் பிரபலமான விஜய் குமார் நடிக்கிறார். இந்நிலையில் நடிகை அனுகிரகா எஸ்.நம்பியாரை தொடரில் ஓராண்டு நடிப்பதற்கு ஒப்பந்தம் செய்து விட்டு படப்பிடிப்பு நடத்தாமலும் சம்பளம் தராமலும் ஏமாற்றிவிட்டதாக அவர் வீடியோ வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அனுகிரகா வெளியிட்டுள்ள வீடியோவில், தற்போது நான் ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி வந்து உள்ளேன். ஓராண்டாக படம் நடிப்பதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு படப்பிடிப்பே நடத்தவில்லை. வேறு படங்களில் நடிக்கவும் வேண்டாம் என கூறினார்கள். 4 மாதங்களாக நான் நடிக்கவில்லை. எனக்கு பொருளாதார ரீதியாக பிரச்சினைகள் ஏற்பட்டு உள்ளன.
படத்தயாரிப்பு நிறுவனத்திடம் கேட்டால் விஜய் குமாரை கேளுங்கள் என்கிறார்கள். நான் கேரளாவில் சிறிய கிராமத்தில் இருந்து வந்தவள். எனக்கு கனவுகள் இருக்கிறது. இந்த விவகாரம் குறித்து எனது நண்பர் விஜய்குமாரிடம் பேசினார். என்னை நடிக்க வர வேண்டாம் என்று விஜய்குமார் அவரிடம் கூறியுள்ளார்.
விஜய்குமாரின் மனைவி என் நண்பரிடம் நீ வேண்டுமானால் அவளை திருமணம் செய்து உடன் வைத்துக் கொள். கொடுத்த கதாபாத்திரத்தில் வந்து நடிக்க சொல்லுடா’ எனக் கூறினார். தயாரிப்பு நிறுவனமும் சரியில்லை. இளம் கலைஞர்களை மதிப்பதில்லை.