இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைகள் தொடரும் நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பாகிஸ்தானுடன் புதிய வர்த்தக ஒப்பந்தம் ஒன்றை அறிவித்துள்ளார். தெற்காசிய நாடான பாகிஸ்தானின் எண்ணெய் வளங்களை மேம்படுத்த அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாகவும், இது இரண்டு நாடுகளுக்குமிடையே புதிய உறவை உருவாக்கும் எனவும் அவர் கூறினார்.

பாகிஸ்தான் நீண்டகாலமாக கடலோர பகுதிகளில் எண்ணெய் இருப்பதாகக் கூறிவந்தாலும், தங்கள் எண்ணெய் வளங்களை செயற்படுத்தாமல், மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து இறக்குமதியையே நம்பி உள்ளது. இந்நிலையில், அமெரிக்கா அந்த வளங்களை பயன்படுத்தத் தயார் நிலையில் இருப்பது முக்கியமான மாறுதலாக பார்க்கப்படுகிறது. இந்த ஒப்பந்த அறிவிப்பை பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷரீப் வரவேற்றுள்ளார்.
மறுபுறம், இந்தியாவுடன் தொடர்புடைய ஆறு நிறுவனங்கள் மீது, ஈரானிடம் இருந்து எண்ணெய் வாங்கியதாகக் கூறி, டிரம்ப் அரசு பொருளாதார தடை விதித்துள்ளது. இதில் கான்சன் பாலிமர்ஸ், ஏ.ஐ. கெமிக்கல் சொலுஷன்ஸ், ராம்நிக்லால் கோசலியா அண்டு கம்பெனி உள்ளிட்ட நிறுவனங்கள் அடங்கும். இது இந்தியாவின் வர்த்தக சூழலுக்கு புதிய அழுத்தத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.
மேலும், இந்தியாவுக்கு எதிராக 25% வரி விதிக்கப்படும் என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார். இது இந்தியாவின் ஜிடிபி மற்றும் உள்நாட்டு பொருளாதாரத்தை நேரடியாக பாதிக்கும் என்று பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். டிரம்ப் அரசு எடுத்துள்ள இந்த நடவடிக்கைகள், இந்தியா-அமெரிக்கா வர்த்தக உறவுகளில் புதுக்குழப்பத்தை உருவாக்கியுள்ளன.