தஞ்சாவூர்: தஞ்சாவூர் தெற்கு மாவட்டம், சேதுபாவாசத்திரம் வடக்கு ஒன்றிய திமுக கழகத்தின் சார்பில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் பூக்கொல்லை கடைவீதியில் தலைமை பொதுக்குழு உறுப்பினர் அ.தனபால் தலைமையில் நடைபெற்றது.
சேதுபாவாசத்திரம் வடக்கு ஒன்றியச் செயலாளர் மு.கி. முத்துமாணிக்கம் வரவேற்றார். தலைமைச் செயற்குழு உறுப்பினர் என். அசோக்குமார் எம் எல் ஏ முன்னிலை வகித்தார். இதில், மாநில மீனவர் அணி துணைச் செயலாளர் ஜெயபிரகாஷ், திமுக தொகுதி பொறுப்பாளர் சரவணன், திமுக தஞ்சை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் பழனிவேல், மாவட்ட அவைத் தலைவர் சுப.சேகர், ஒன்றியச் செயலாளர்கள் வை. ரவிச்சந்திரன், கோ. இளங்கோவன், சோம. கண்ணப்பன் மற்றும் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, கிளைக் கழக, சார்பு அணிகளின் நிர்வாகிகள், கட்சியினர், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இதில், திமுக சட்டத்துறை துணைச் செயலாளர் சூர்யா வெற்றி கொண்டான் கலந்து கொண்டு பேசினார். மாநில கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர் பேசுகையில், ஜெயலலிதா அம்மையார் ஊழலில் சம்பாதித்ததை நீதிமன்றம் பிடுங்கி ஏலத்தில் விடக்கூடிய நிலை இன்றைக்கு உள்ளது. அதுதான் அண்ணா திமுக அவர்கள் நம்மை பார்த்து குறை சொல்கிறார்கள். சூர்யா வெற்றிகொண்டான் பேசுகையில், முன்னாள் அதிமுக அமைச்சர் வைத்திலிங்கத்தை குறை சொல்லி பேசினார். அப்படி எல்லாம் சொல்லக்கூடாது. பாவம் அவர் நம்ம ஆள், யார் எப்ப நம்ம பக்கம் வருவார்கள் எனத் தெரியாது.
நாளைக்கே நமது பக்கம் வந்தாலும் வந்து விடுவார். யாரையும் ஆவேசமாக திட்டுவதற்கு பயமாக உள்ளது. காரணம் என்னவென்று கேட்டால் அடுத்த நாள் நம்ம பக்கம் வந்து விடுகிறார்கள். எனவே சூர்யா வெற்றி கொண்டான் அவசரப்பட்டு யாரையும் ஆவேசமாக பேசி விடாதீர்கள். அண்ணா திமுக நால்ரோடு முகத்திலே நிற்கிறது. யார் தலைவர், யார் பொதுச் செயலாளர், யாருக்கு சின்னம் என்று தெரியாத நிலை உள்ளது. அதிமுக தொண்டர்கள் ஒன்றும் தெரியாத நிலையில் உள்ளனர்.
மக்களை மதிக்க வேண்டும், மக்களே மதிக்கிறீர்களோ இல்லையோ கட்சிக்காரர்களை முதலில் மதியுங்கள். அது ஒன்றே போதும், கட்சிக்காரன் குறை சொன்னால் பத்து ஓட்டு போகும். மேடையில் இருக்கும் எல்லோருக்கும் நான் சொல்கிறேன். மந்திரிகளை வைத்தே நான் பேசியிருக்கிறேன், ஏன் தலைவரை வைத்தே நான் பேசியிருக்கிறேன். அதைப் பற்றி நான் கவலைப்படவில்லை. நமக்குள் தானே பேசுகிறோம். இந்தியாவில் இருக்கும் எந்த அரசியல் கட்சிக்கும் இல்லாத வலிமையும் பலமும் திமுகவுக்கு உள்ளது. நம்முடைய கட்சிக்காரர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து நிற்க வேண்டும். இருக்கக்கூடிய 10 மாதங்கள் நெருக்கடி எல்லாம் தருவார்கள் நமக்குள் உள்ள குழப்பங்களால் தான் பிரச்சனை ஏற்படுகிறது. நாம் ஒற்றுமையாக இருந்தால் ‘எவன்’ தயவும் தேவையில்லை” இவ்வாறு அவர் பேசினார். நிறைவாக ஒன்றிய துணைச் செயலாளர் கே காமராஜ் நன்றி கூறினார்