புதுடில்லி: நடவடிக்கையில் எந்த தளர்வும் கிடையாது… போதைப் பொருள்கள் மற்றும் அவை கடத்தப்படுவதற்கு எதிரான கடுமையான நடவடிக்கைகளை மோடி அரசு எடுத்து வருவதாகவும், போதைப் பொருள் தொடர்பான குற்றங்களுக்கு எதிரான நடவடிக்கை எந்தத் தளா்வும் இல்லாமல் தொடரும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்தார்.
இது தொடா்பாக அமித் ஷா வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில் தெரிவித்துள்ளதாவது: பணத்தின் பேராசைக்காக இளைஞா்களை போதைப் பொருள் என்ற இருண்ட படுகுழியில் இழுத்துச் செல்லும் போதைப் பொருள் கடத்தல்காரர்களை தண்டிப்பதில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு உறுதியாக உள்ளது.
போதைப் பொருள் தொடர்பான குற்றங்களுக்கு எதிரான கடுமையான நடவடிக்கையின் விளைவாக, நாடு முழுவதும் இந்த ஆண்டு (2025) மட்டும் 12 வெவ்வேறு வழக்குகளில் 29 போதைப் பொருள் கடத்தல்காரர்கள் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டுள்ளனர்.
2019-க்கு பின்னர் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்குகளின் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு இந்த ஆண்டில் இதற்கான தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளனர். அகமதாபாத், போபால், சண்டிகர், கொச்சின், டேராடூன், தில்லி, ஹைதராபாத், இந்தூர், கொல்கத்தா, லக்னௌ ஆகிய மண்டலங்களில் போதைப் பொருள் கடத்தல் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் குற்றவாளிகள் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டுள்ளனர்.
இந்த தண்டனைகள் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை வெற்றிகரமாக நடத்துவதை உறுதி செய்வதற்கான தேசிய போதைப்பொருள் தடுப்பு மையத்தின் (என்சிபி) செயல்களுக்கான எடுத்துக்காட்டு என கூறினார், போதைப் பொருள் கடத்தல்காரர்களை தண்டிப்பதில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு உறுதியாக உள்ளது என மீண்டும் தெரிவித்தார்.
அமித்ஷா தலைமையின் கீழ், 2047-க்குள் இளைஞா்களை போதைப் பொருள்களில் இருந்து பாதுகாத்து, போதைப் பொருள்களற்ற பாரதத்தை உருவாக்க வேண்டும் என்ற பிரதமர் மோடியின் தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதற்கு போதைப்பொருள் தடுப்பு மையம் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இதற்கு பொதுமக்கள் போதைப்பொருள் கடத்தல் குறித்த தகவல்களை என்சிபி உதவி எண் 1933 இல் தெரிவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.