சென்னை: தமிழ் நடிகரும், தற்போது அரசியலில் தீவிரமாக இயங்கிவரும் விஜய் தனது தவெக கட்சி நடவடிக்கைகளில் பிசியாக சுற்றி வருகிறார். இன்று காலை கோவையை வந்தடைந்த விஜய்க்கு ரசிகர்கள் பாரம்பரியமான வரவேற்பு அளித்தனர். அவரை பார்க்க வந்த கூட்டத்தில் ஒருவன் விஜய்யின் வேனில் ஏற முயற்சித்தபோது, அதனை பார்த்த விஜய் திடுக்கிட்டார். அந்த ரசிகரை அன்புடன் வேண்டுகோள் வைத்து கீழே இறங்குமாறு சொன்ன விஜயின் இந்த நிகழ்வு குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
அதே நேரத்தில், கோவை குருவம்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நடைபெற்ற தவெக பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டத்தில் ஏற்பட்ட ஒரு சலசலப்பு தற்போது கவனத்தை ஈர்த்து வருகிறது. இந்த கூட்டத்தில் நாமக்கல், ஈரோடு, சேலம் ஆகிய பகுதிகளில் இருந்து விஜய் ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் திரளாக வந்திருந்தனர். கூட்டத்திற்கு அனுமதி வழங்கும் போது, பாதுகாப்பு பணியில் இருந்த ஒருவர், ஒரு நிர்வாகியின் அடையாள அட்டையை கிழித்து எரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

அந்த உறுப்பினரிடம் புகைப்படம் இல்லாத அடையாள அட்டை இருந்ததாக கூறப்பட்டாலும், அதனை கிழித்தது ஏன் என்பது குறித்து ரசிகர்கள் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். உள்ளே அனுமதிக்காமலிருந்தாலும் பரவாயில்லை, ஆனால் அட்டை எரித்தது தவறு என்று ரசிகர்கள் மறுத்தனர்.
இந்த பரபரப்புக்கிடையே, விஜய் மேடையில் பேசும் நேரம் வந்தது. தனது ஸ்டைலில் மிக அமைதியாக பேசத் தொடங்கிய அவர், “அங்க நிறைய வயர் போறது… உங்க பாதுகாப்புக்காகச் சொல்றேன். கொஞ்சம் பின்னாடி போங்க. இன்னும் மூணு மணி நேரம் உங்களோடதான் இருக்கப் போறேன். தயவு செய்து புரிஞ்சுக்கோங்க,” என்றார். ரசிகர்களும் தலைவரின் வார்த்தையை மரியாதையுடன் ஏற்று அமைதியுடன் நடந்துகொண்டனர்.
இந்த நிகழ்வின் முக்கிய அம்சங்களில் ஒன்று, விஜய்யின் நெருங்கிய நண்பர் ஸ்ரீநாத் வருகை தந்ததுதான். கல்லூரி காலம் முதல் சினிமா வரையிலும் விஜய்யுடன் பயணித்தவர் இவர். தவெக கட்சியின் துண்டை தோளில் போட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அவரை பார்த்த ரசிகர்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர்.
விஜய் நடித்து வரும் “ஜனநாயகன்” படத்தின் படப்பிடிப்பும் ஒரே நேரத்தில் நடைபெற்று வரும் நிலையில், அவருடைய அரசியல் பயணம் இரட்டை வேகத்தில் முன்னேறி வருகிறது. ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் பூஜா ஹெக்டே, பிரியாமணி, பாபி தியோல் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர்.
இந்தப் படம், விஜய்யின் கடைசி திரைப்படமாக இருக்கலாம் என்ற தகவலால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். அரசியலிலும், திரையுலகிலும் விஜய்யின் அடுத்த கட்ட பயணம் மிகவும் பரபரப்பாகவும் உற்சாகமாகவும் அமைகிறது.