வேலூர்: “வடமாநிலத்தைச் சேர்ந்த லட்சக்கணக்கானோர் தமிழ்நாட்டில் வாக்காளர்களாக மாறும் சூழ்நிலை உருவாகி வருகிறது. இது நடைபெறுமாயின், தமிழக அரசியலில் நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்தும்” என அமைச்சர் துரைமுருகன் எச்சரித்துள்ளார். இது தொடர்பாக அவர் பதிலளிக்கும்போது, இது ஒரு கிரானிக்கள் பிரச்சனை எனவும், தேசிய அளவில் தலைவர்கள் கலந்துகொள்ள வேண்டிய பிரச்சனையெனவும் கூறினார்.

சென்னை, செங்கல்பட்டு, கோவை, திருப்பூர் உள்ளிட்ட தொழிற்துறை நகரங்களில் வடமாநிலத்தவர்களின் கூலி வேலை தேடல் பெரிதும் உள்ளது. தற்போது பீகாரைச் சேர்ந்த 6.5 லட்சம் பேர் தமிழக வாக்காளர்களாக மாறக்கூடும் என்கிற தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது அரசியல் கட்சிகளிடையே பதற்றத்தையும் கண்டனத்தையும் உருவாக்கியுள்ளது.
இதுபற்றி, திமுக முதல்வர் ஸ்டாலினை சீமான், பிரேமலதா, ஓ.பி.எஸ் ஆகியோர் சந்தித்தது அரசியல் கூட்டணிக்கான அறிகுறியா என கேள்விகள் எழுந்தன. ஆனால், இதை மறுத்த அமைச்சர் துரைமுருகன், “முதலமைச்சரின் உடல்நிலை காரணமாக அரசியல் மரியாதை நிமித்தமாக அவர்கள் நேரில் சந்தித்தனர். இதற்கு எந்த பின்னணியும் இல்லை” என்றார்.
இதேநேரத்தில், பீகாரில் உயிருடன் இருப்பவர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கியுள்ளதாக கூறிய அவர், அந்த மாதிரிப் பிழைகள் தமிழ்நாட்டில் செய்ய முடியாது என சுட்டிக்காட்டினார். வெளி மாநிலத்தவர்களும் இங்கு பணிபுரிகின்ற சூழ்நிலையை ஒட்டி, அவர்களது வாக்காளர்ச் சேர்க்கை பற்றி விழிப்புணர்வுடன் அணுக வேண்டும் என்பதே துரைமுருகனின் வலியுறுத்தல்.