காசா: போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கான அடுத்த கட்ட பேச்சுவார்த்தைக்கு தயார் என்று ஹமாஸ் அமைப்பு அறிவித்துள்ளது.
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையேயான மோதல் போக்கானது பல வருடங்களாக நீடித்து வருகிறது. பாலஸ்தீனத்தின் ஒரு பகுதியான காசாவை ஹமாஸ் அமைப்பினர் தங்களுடைய கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். இந்த சூழலில், இஸ்ரேல் மீது கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு கொடூர தாக்குதல் நடத்தியது.
இதில் இஸ்ரேல் கடுமையாக பாதிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கானோர் பணய கைதிகளாக சிறை பிடித்து செல்லப்பட்டனர். எனினும், போர்நிறுத்த ஒப்பந்தம் அடிப்படையில், அவர்களில் சிலரை இஸ்ரேல் மீட்டது. மீதமுள்ளவர்களையும் மீட்போம் என சூளுரைத்தது. இதனை தொடர்ந்து காசாவுக்கு எதிரான போரில் இஸ்ரேல் ஈடுபட்டது.
ஓராண்டுக்கு மேலாக நடந்து வரும் இந்த தாக்குதலில், காசா பகுதியில் 46 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்து உள்ளனர். லட்சக்கணக்கானோர் காயமடைந்து உள்ளனர். இதனை காசா சுகாதார அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
இந்த சூழலில், போர் நிறுத்த ஒப்பந்தம் அடிப்படையில் இஸ்ரேல் கைதிகள் மற்றும் பாலஸ்தீனிய கைதிகள் பரஸ்பரம் விடுவிக்கப்பட்டு வருகின்றனர். இதில், முதல்கட்ட போர்நிறுத்த ஒப்பந்தம் இந்த வார இறுதியில் முடிவுக்கு வருகிறது. இந்த சூழலில், இரு தரப்பிலும் ஒப்பு கொண்டதன்படி, பரஸ்பரம் கைதிகள் விடுவிப்பு நேற்று நடந்தது.
இதன்படி, இஸ்ரேல் பணய கைதிகள் 4 பேரை ஹமாஸ் அமைப்பு விடுவித்து உள்ளது. இதற்கு ஈடாக, இஸ்ரேல் பிடித்து வைத்திருந்த 600-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனிய கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.
2-வது கட்ட பேச்சுவார்த்தை இன்னும் தொடங்கப்படாமல் உள்ளது. இந்நிலையில், காசா முனை பகுதியில் போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்படுவதற்கான அடுத்த கட்ட பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறோம் என ஹமாஸ் அமைப்பு இன்று அறிவித்து உள்ளது.
இதுபற்றி அந்த அமைப்பு வெளியிட்ட அறிவிப்பில், மீதமுள்ள பணய கைதிகளை பாதுகாப்பாக விடுதலை செய்வதற்கு இஸ்ரேலுக்கு உள்ள ஒரே வழி பேச்சுவார்த்தை நடத்துவது மற்றும் ஒப்பந்தத்தின்படி நடப்பது மட்டுமே ஆகும்.
போர்நிறுத்த ஒப்பந்தத்தில் இருந்து பின் வாங்கும் எந்தவொரு முயற்சியும் பிடித்து வைக்கப்பட்டு இருப்பவர்களுக்கும், அவர்களுடைய குடும்பத்தினருக்கும் பாதிப்பு ஏற்படுத்த மட்டுமே வழிவகுக்கும் என்று எச்சரித்து உள்ளது.
600-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனிய கைதிகள் நேற்று நள்ளிரவில் விடுவிக்கப்பட்டு உள்ளனர் என ஹமாஸ் அமைப்பு உறுதிப்படுத்தி உள்ளது. அவர்களில் பலர் காசாவுக்கு திரும்பி விட்டனர். இஸ்ரேல் மீது 2023-ம் ஆண்டு தாக்குதல் நடந்த பின்னர், பாதுகாப்புக்கான சந்தேகத்தின் அடிப்படையில், குற்றச்சாட்டுகள் எதுவுமின்றி காசாவில் பலரை இஸ்ரேல் பிடித்து சென்றது. இந்நிலையில், அவர்களை போர்நிறுத்த ஒப்பந்தத்தின்படி விடுவித்து வருகிறது.