பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் 49-வது ஆசியான் உச்சிமாநாடு தொடங்கியுள்ள நிலையில், தென்கிழக்கு ஆசிய நாடுகளின் அரசியல் மற்றும் பொருளாதார எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் முக்கிய ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன.
மூன்று நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் பிராந்திய பாதுகாப்பு, சர்வதேச வர்த்தகம், எரிசக்தி நெருக்கடி, கடல் எல்லைப் பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் முக்கிய இடம்பிடித்துள்ளன. பிலிப்பைன்ஸ் அதிபர் பெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர் மாநாட்டிற்குத் தலைமை வகிக்கிறார்.
உலகின் பல்வேறு பகுதிகளில் போர் பதற்றம் அதிகரித்துள்ள சூழலில் இந்த மாநாடு நடைபெறுவது கூடுதல் முக்கியத்துவம் பெற்றுள்ளது. குறிப்பாக மத்திய கிழக்கில் நிலவும் போர் காரணமாக எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் பொருளாதாரத்தைப் பாதித்து வருகின்றன. இதனை எதிர்கொள்ள பிராந்திய அளவில் எரிசக்தி பாதுகாப்பை வலுப்படுத்துவது குறித்து தலைவர்கள் ஆலோசித்து வருகின்றனர்.
தென் சீனக் கடல் பகுதியில் சீனா மற்றும் பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு இடையே நிலவி வரும் கடல் எல்லைப் பிரச்சினையும் மாநாட்டின் முக்கிய விவாதப் பொருளாக உள்ளது. கடல் போக்குவரத்துச் சுதந்திரம், சர்வதேச கடல் சட்டங்களை மதித்தல், பிரச்சினைகளுக்கு அமைதியான முறையில் தீர்வு காணுதல் ஆகியவற்றை வலியுறுத்தும் வகையில் மாநாட்டில் தீர்மானங்கள் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மியான்மரில் நீடிக்கும் உள்நாட்டுப் போர் மற்றும் அங்கு நிலவும் மனிதாபிமான நெருக்கடியும் விவாதிக்கப்படுகின்றன.
இந்த மாநாட்டில் அமெரிக்கா, சீனா, இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் பங்கேற்கும் தொடர்புடைய கூட்டங்களும் நடைபெற உள்ளன. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நவம்பர் 17ஆம் தேதி நடைபெறும் அமெரிக்கா – ஆசியான் சிறப்பு மாநாட்டில் பங்கேற்க உள்ளார். இந்த மாநாட்டின் முடிவுகள் ஆசியாவின் எதிர்கால அரசியல், பொருளாதார உறவுகளில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் என சர்வதேச அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
