சிங்கப்பூர்: உலக பொருளாதாரம் தற்போது அதிகரிக்கும் எரிசக்தி விலை, வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ள அரசுக் கடன் மற்றும் செயற்கை நுண்ணறிவு முதலீட்டு வளர்ச்சி ஆகியவற்றால் புதிய சவால்களை எதிர்கொள்கிறது என சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா எச்சரித்துள்ளார்.
மத்திய கிழக்கு மோதல்களால் எண்ணெய் மற்றும் எரிசக்தி விநியோகத்தில் பாதிப்பு ஏற்படுவதால் உலக நாடுகளில் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.
இதனிடையே AI துறையில் மிகப்பெரிய அளவில் முதலீடுகள் மேற்கொள்ளப்படுவது உலக பொருளாதார வளர்ச்சிக்கு உதவினாலும், இந்த முதலீடுகளின் எதிர்பார்த்த பலன்கள் தாமதமானால் நிதிச் சந்தைகளில் அதிர்வுகள் ஏற்படலாம் என IMF எச்சரித்துள்ளது.
குறிப்பாக அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட வளர்ந்த நாடுகளின் அரசுக் கடன் அளவு அதிகரித்திருப்பது குறித்தும் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.
AI வளர்ச்சியால் வேலைவாய்ப்பு சந்தையிலும் மாற்றங்கள் ஏற்படக்கூடும் என்பதால், தொழிலாளர்களுக்கு புதிய திறன் பயிற்சிகளை வழங்க வேண்டும் என IMF வலியுறுத்தியுள்ளது.
சர்வதேச பொருளாதாரத்தை நிலையாக வைத்திருக்க அரசுகள் நிதி ஒழுங்கையும், பணவீக்கக் கட்டுப்பாட்டையும் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் ஜார்ஜீவா தெரிவித்துள்ளார்.
