தைபே: அமெரிக்காவிடம் இருந்து வாங்கப்பட்ட அதிநவீன F-16V Block 70 போர் விமானங்களின் முதல் 2 விமானங்கள் தைவானில் தரையிறங்கியுள்ளன.
சீனாவின் ராணுவ அழுத்தம் அதிகரித்து வரும் நிலையில், தைவானின் வான் பாதுகாப்பை வலுப்படுத்தும் நடவடிக்கையின் முக்கிய கட்டமாக இந்த விமானங்கள் கருதப்படுகின்றன.

66 விமானங்களுக்கான ஒப்பந்தம்
2019-ம் ஆண்டு அமெரிக்காவுடன் சுமார் 8 பில்லியன் டாலர் மதிப்பில் 66 புதிய F-16V போர் விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தத்தை தைவான் மேற்கொண்டது.
பல காரணங்களால் விநியோகத்தில் தாமதம் ஏற்பட்ட நிலையில், முதல் இரண்டு விமானங்கள் அக்டோபர் 2-ம் தேதி தைவானின் தைதுங் பகுதியில் உள்ள சிஹாங் விமானப்படைத் தளத்தில் தரையிறங்கின.
பாதுகாப்புத் திறன் அதிகரிப்பு
தைவானின் பாதுகாப்புத் துறை அமைச்சர் வெலிங்டன் கூ, மேலும் F-16V விமானங்கள் இந்த ஆண்டு தைவானுக்கு வரும் என தெரிவித்துள்ளார்.
புதிய விமானங்கள் தைவானின் வான் பாதுகாப்புத் திறனை அதிகரிக்கும் நிலையில், சீனாவுடனான பதற்றமான சூழ்நிலையில் இந்த நடவடிக்கை சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது.
