சூடானின் தென்கிழக்குப் பகுதியில் துணை ராணுவப் படையினர் நடத்தியதாகக் கூறப்படும் டிரோன் தாக்குதலில் 19 பொதுமக்கள் உயிரிழந்த சம்பவம் சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் மேலும் 20 பேர் காயமடைந்துள்ளதாக மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன.
சூடானில் ராணுவத்துக்கும் துணை ராணுவப் படையான விரைவு ஆதரவுப் படைக்கும் இடையே நீண்டகாலமாக மோதல் நடைபெற்று வருகிறது. இந்த மோதலின் ஒரு பகுதியாக ப்ளூ நைல் மாகாணத்தில் உள்ள இரண்டு நகரங்களில் டிரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சூடான் மனித உரிமை அமைப்பான எமர்ஜென்சி லாயர்ஸ் வெளியிட்ட தகவலின்படி, குடியிருப்புப் பகுதிகளைக் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல்களில் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக டமாசின் நகரில் மூன்று குடியிருப்புப் பகுதிகளில் டிரோன்கள் தாக்கியதாகக் கூறப்படுகிறது. உயிரிழந்தவர்களில் ஆறு பெண்களும் அடங்குவதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்தத் தாக்குதல்களில் காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். ரோசெய்ரஸ் நகரிலும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தாக்குதல் நடைபெற்ற பகுதிகளில் ஏற்பட்டுள்ள சேதங்கள் குறித்த முழுமையான விவரங்கள் தொடர்ந்து சேகரிக்கப்பட்டு வருகின்றன.
உள்நாட்டுப் போர் காரணமாக ஏற்கனவே உணவு, மருத்துவம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளுக்குத் தட்டுப்பாட்டைச் சந்தித்து வரும் சூடான் மக்களுக்கு இந்தச் சம்பவம் மேலும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் தாக்குதல்கள் நடத்தப்படுவது சர்வதேச மனிதாபிமானக் கவலைகளையும் அதிகரித்துள்ளது.
