காபூல்:
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் போர் நிறுத்தத்தை மீறி நடத்திய விமானத் தாக்குதலில், கிரிக்கெட் வீரர்கள் 3 பேர் உட்பட 10 பேர் உயிரிழந்தனர்.
கடந்த ஒரு வாரமாக பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் எல்லையில் துப்பாக்கிச் சண்டை மற்றும் ஏவுகணை தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளன. இதனால் இரு தரப்பிலும் பலர் பலியாகினர். அமைதிக்கான முயற்சியாக இரு நாடுகளும் 48 மணி நேர போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டிருந்தன. இதற்கிடையே பாகிஸ்தான் மீண்டும் தாக்குதல் நடத்தி, அமைதி முயற்சியை முறியடித்துள்ளது.

பாக்டிகா மாகாணத்தின் அர்குன் மற்றும் பர்மல் மாவட்டங்களில் நடந்த தாக்குதலில் 10 பேர் உயிரிழந்தனர். இதில் 12 பேர் பலத்த காயம் அடைந்தனர். உயிரிழந்தவர்களில் ஆப்கானிஸ்தான் உள்நாட்டு கிரிக்கெட் அணியைச் சேர்ந்த கபீர், சிப்கத்துல்லா, ஹாரூன் ஆகியோர் அடங்குவர். இந்தச் சம்பவம் ஆப்கான் விளையாட்டு உலகை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
இதையடுத்து, பாகிஸ்தான் மற்றும் இலங்கையுடன் நடைபெறவிருந்த டி20 தொடரில் இருந்து விலகுவதாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இதனால் இரு நாடுகளுக்கிடையே பதற்றம் மேலும் உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. “பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுப்போம்,” என ஆப்கான் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.