ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் தொடர்ந்து அத்துமீறி வருவதாக குற்றம்சாட்டி, ஆப்கானிஸ்தான் பாதுகாப்புப் படைகள் நேற்று இரவு பாகிஸ்தான் எல்லை நிலையங்கள் மீது கடும் தாக்குதல் நடத்தியுள்ளன. இந்த அதிரடி நடவடிக்கையில் 58 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதுடன், 30 பேர் கடுமையாக காயமடைந்தனர். அதே நேரத்தில், 9 ஆப்கான் வீரர்களும் உயிரிழந்துள்ளனர். சவுதி அரேபியா மற்றும் கத்தார் தலையீட்டின் பின்னர் தாக்குதல்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாக ஆப்கான் அரசின் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதலுக்குப் பின், பாகிஸ்தான் தனது முக்கிய எல்லைகளை மூடி பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் இரு நாடுகளுக்கும் இடையே நீண்டநாள் நிலவி வரும் எல்லை பிரச்சினையை மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தான் தரப்பில், துராண்டு கோட்டிற்கு அருகே நடைபெற்ற இந்த தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்தின் 25 நிலைகள் கைப்பற்றப்பட்டதாகவும், பல ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
முன்னதாக பாகிஸ்தான், காபூல் மற்றும் கிழக்கு பகுதிகளில் உள்ள சந்தைகள் மீது விமான தாக்குதலை நடத்தியதாக ஆப்கானிஸ்தான் குற்றம் சாட்டியிருந்தது. இதற்கு பதிலடியாக, ஆப்கானியப் படைகள் ஹெல்மண்ட், காந்தஹார், பாக்டிகா உள்ளிட்ட மாகாணங்களில் தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நடவடிக்கை நள்ளிரவில் நிறைவடைந்தது.
இந்நிலையில், பாகிஸ்தான் தனது டோர்காம், சாமன், கார்லாச்சி, அங்கூர் அட்டா மற்றும் குலாம் கான் எல்லைப் பகுதிகளையும் மூடியுள்ளது. இதே சமயம், ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர் இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ளார். பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.