பாகிஸ்தானுடன் ஏற்பட்டுள்ள பிரச்சனைக்கு அமைதியான தீர்வை விரும்புகிறோம், ஆனால் அவ்வாறு சாத்தியமில்லையெனில் வேறு வழியில் பதிலளிக்க வேண்டிய சூழ்நிலை வரும் என்று ஆப்கானிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் அமீர் கான் முத்தகி எச்சரித்துள்ளார்.
டில்லியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது: “எந்த பிரச்சனையும் பேச்சு மூலமே தீர்க்கப்பட வேண்டும் என்பது எங்கள் அரசியல் கொள்கை. எல்லையில் பதற்றம் தேவையில்லை. ஆனால் பாகிஸ்தான் அமைதிப் பேச்சுக்கு ஒத்துழைக்காவிட்டால், எங்களது நிலத்தை மற்றும் வான்வெளியை பாதுகாப்பது எங்களது கடமை. யாராவது அந்த உரிமையில் குறுக்கிட்டால், உடனடியாக பதிலடி கொடுக்கப்படும்,” என்றார்.

மேலும், “பாகிஸ்தான் மக்களோ அல்லது அரசியல்வாதிகளோ எங்களது எதிரிகள் அல்ல. ஆனால் சில தீய சக்திகள் இரு நாடுகளுக்கிடையேயான உறவை பாதிக்க முயல்கின்றன. நான்கு ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் எந்த பெரிய மோதலும் இல்லை. பிராந்திய அமைதிக்காக நாம் முயல்கிறோம்,” எனக் குறிப்பிட்டார்.
அமீர் கான் முத்தகி மேலும், “சோவியத் யூனியன், அமெரிக்கா, நேட்டோ உள்ளிட்ட பல சக்திகளுடன் 40 ஆண்டுகளாக போர் நடந்தது. இப்போது தான் எங்கள் நாடு முழுமையாக சுதந்திரம் பெற்றுள்ளது. நாங்கள் எந்தவித சண்டையையும் விரும்பவில்லை. அமைதியே எங்கள் நோக்கம்,” என தெரிவித்தார்.
அவர் இன்று ஆக்ரா செல்லவிருந்த நிலையில், அவரது பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.