லண்டன்: லண்டனில் இளம் பெண்ணின் சடலம் காரில் இருந்து மீட்கப்பட்டது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். தலைமறைவான கணவரை தேடி வருகின்றனர்.
லண்டனில் கார் ஒன்றில் இருந்து இளம் பெண்ணின் சடலம் மீட்கப்பட்டது தொடர்பாக இந்திய வம்சாவளி கணவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
லண்டனில் இருந்து 145 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கோர்பியில் வசித்து வந்த 24 வயதான ஹர்ஷிதா பிரெல்லாவின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக சில நாட்களுக்கு முன்பு காவல் நிலையத்திற்கு தகவல் வந்தது.
இதனையடுத்து பெண்ணின் இல்லத்திற்கு சென்ற போலீசார், வீடு பூட்டப்பட்டிருந்ததால் காணாமல் போன வழக்கு பதிவு செய்து பெண்ணை தேடினர். இந்நிலையில் லண்டனில் கேட்பாரற்று கிடந்த காரில் சடலம் மீட்கப்பட்டதை தொடர்ந்து தனிப்படை அமைத்து விசாரணையை போலீசார் முடுக்கிவிட்டுள்ளனர்.
இதனிடையே, பெண்ணின் கணவர் பங்கஜ் லம்பா, பிரிட்டனை விட்டு தப்பிச் சென்றிருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது.