வங்கதேசத்தில் இடஒதுக்கீட்டுக்கு எதிராக மாணவர்கள் நடத்திய போராட்டம் பெரும் கலவரமாக மாறியது. இதன் காரணமாக பிரதமர் ஷேக் ஹசீனா ஆகஸ்ட் 5-ம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவில் தஞ்சமடைந்தார். தற்போது வங்கதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு ஆட்சி செய்து வருகிறது. இந்நிலையில், வங்கதேசம் முழுவதும் இந்துக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன.
மேலும், வங்கதேச அரசு பாகிஸ்தானுடன் நட்புறவுடன் நடந்து கொள்கிறது. இதன் காரணமாக வங்கதேச எல்லைப் பகுதிகள் வழியாக பாகிஸ்தான் பயங்கரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டதையடுத்து, இந்திய வெளியுறவுத்துறை செயலர் விக்ரம் மிஸ்ரி நேற்று அதிகாரப்பூர்வ பயணமாக வங்கதேச தலைநகர் டாக்கா சென்றார். அங்கு, வங்கதேச வெளியுறவு செயலாளர் முகமது ஜாசிம் உதீனை சந்தித்து பேசினார்.
இதையடுத்து, வங்கதேச வெளியுறவு ஆலோசகர் முகமது தவுகித் ஹொசைனுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர், வங்கதேச இடைக்கால அரசுத் தலைவர் முகமது யூனுசையும் சந்தித்து முக்கியப் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த சந்திப்புகள் குறித்து இந்திய வெளியுறவுத்துறை செயலர் விக்ரம் மிஸ்ரி டாக்காவில் நிருபர்களிடம் கூறியதாவது:- வங்கதேசத்தில் வசிக்கும் சிறுபான்மையினரின் (இந்துக்கள்) பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தினேன். இந்து கோவில்கள் மீதான தாக்குதல்கள் குறித்து ஆழ்ந்த கவலையை தெரிவித்தேன்.
இது தொடர்பாக வங்கதேச தலைவர்களுடன் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினேன். பங்களாதேஷ்-இந்தியா உறவுகளை முன்னேற்ற வேண்டும். எரிசக்தி, நதிநீர் பங்கீடு, மின்சாரம் மற்றும் வர்த்தகம் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இரு நாட்டு மக்களுக்கும் பயனளிக்கும் இந்த திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்துவது குறித்து பேச்சு வார்த்தை நடத்தினேன். இவ்வாறு விக்ரம் மிஸ்ரி கூறினார். இதுகுறித்து இந்திய பாதுகாப்பு வட்டாரங்கள் கூறியதாவது:-
பாகிஸ்தானில் இருந்து வங்கதேசத்துக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களில் சோதனை நடத்த மாட்டோம் என வங்கதேச அரசு அறிவித்துள்ளது. இதைப் பயன்படுத்தி, பாகிஸ்தானில் இருந்து பயங்கரவாதக் குழுக்கள் ஆயுதங்கள் மற்றும் போதைப் பொருட்களை வங்கதேசத்துக்கு இறக்குமதி செய்து, அங்கிருந்து இந்தியாவுக்கு கடத்த முயற்சி செய்யலாம். இந்தியாவும் வங்கதேசமும் சுமார் 4,096 கிமீ எல்லையை பகிர்ந்து கொள்கின்றன. வங்கதேசத்தில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றம் இந்தியாவின் எல்லைப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் வளர்ச்சியை தடுக்க பயங்கரவாதத்தின் மூலம் பாகிஸ்தான் பினாமி போரை நடத்தி வருகிறது. இதற்கு தற்போதைய வங்கதேச அரசும் துணைபோவதாக தெரிகிறது. இதனைக் கண்டித்தும், வங்கதேசத்துக்கு பகிரங்க எச்சரிக்கை விடுக்கும் வகையிலும் இந்திய வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி ஒரு நாள் பயணமாக வங்கதேசத்துக்கு திங்கள்கிழமை சென்றார். வருகை ஆக்கப்பூர்வமாக இருந்தது. இனி வங்கதேச அரசின் செயல்பாட்டில் மாற்றம் வரும் என நம்புகிறோம். இவ்வாறு இந்திய பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.