வாஷிங்டன்: ஐக்கிய நாடுகள் சபை வருகையின் போது மூன்று முறை நாசவேலை நடந்ததாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.
சமூக வலைதளத்தில் பதிவிட்ட அவர், “முதலில் உரையாற்ற மாடிக்கு செல்லும் எஸ்கலேட்டர் செயலிழந்தது. மெலனியாவும் நானும் கவிழாமல் தப்பினோம். பின்னர், அரங்கில் கோடிக்கணக்கானோர் பார்த்துக்கொண்டிருக்கையில் டெலிப்ராம்ப்டர் இயங்கவில்லை. கடைசியாக, உரையை முடித்தவுடன் ஒலி முற்றிலும் அணைந்துவிட்டது. மெலனியா கூட என் பேச்சை கேட்க முடியவில்லை என்றார்” என்று தெரிவித்துள்ளார்.

இது தற்செயலானது அல்ல, திட்டமிட்ட நாசவேலை என அவர் சாடியுள்ளார். “ஐ.நா.வில் இத்தகைய மூன்று தவறுகள் நிகழ்ந்திருப்பது வெட்கக்கேடானது. இதற்கான நகலை பொதுச்செயலாளருக்கு அனுப்பியுள்ளேன். உடனடியாக விசாரணை நடக்க வேண்டும். மேலும், எஸ்கலேட்டரில் உள்ள அவசர நிறுத்த பொத்தானை பாதுகாப்பான இடத்திற்கு மாற்ற வேண்டும்” என்றும் கூறினார்.
அதே நேரத்தில், உரையை டெலிப்ராம்ப்டர் இல்லாமல் நிகழ்த்தியபோதும் நல்ல விமர்சனங்கள் கிடைத்துள்ளதாக டிரம்ப் பெருமிதம் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து ரகசிய போலீசார் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.