அடிஸ் அபாபா: உலகின் மிக நீண்ட நதியான நைல் நதியின் குறுக்கே எத்தியோப்பியா கடந்த 15 ஆண்டுகளாக சவாலாக கட்டியிருந்த மின்னணை திட்டம் தற்போது முழுமை பெற்றுள்ளது. எகிப்து மற்றும் சூடானின் கடுமையான எதிர்ப்பையும் மீறி, ‘மறுமலர்ச்சி அணை’ என்ற பெயரில் உருவாக்கப்பட்ட இந்த திட்டம், ஆப்ரிக்காவின் மிகப்பெரிய நீர்மின் திட்டமாக திகழ்கிறது.

நைல் நதிக்கு மூலமான நீல நைல், எத்தியோப்பியாவில் உருவாகிறது. இதன் குறுக்கே 2011ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட அணை திட்டம், 6,000 மெகாவாட் மின் உற்பத்திக்கு வழிவகுக்கிறது. இது அந்த நாட்டின் தற்போதைய மின் உற்பத்தியைவிட இரட்டிப்பான அளவு ஆகும். இந்த திட்டத்தின் முடிவில், எத்தியோப்பியாவுக்கு மின்சாரம் ஏற்றுமதி செய்யும் வாய்ப்பு உருவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
அணையின் நீளம் 5,400 அடி மற்றும் உயரம் 525 அடி ஆகும். 7,400 கோடி கன அடி நீரை சேமிக்கக் கூடிய திறன் கொண்ட இந்த அணை, சூடான் எல்லையை ஒட்டிய பகுதியில் அமைந்துள்ளது. இதன் நீர்பங்கீடு குறித்து கடந்த ஆண்டுகளில் பல பேச்சுவார்த்தைகள் நடந்தும், எந்த முடிவும் எட்டப்படவில்லை. சில கட்டங்களில், போர் அபாயமும் உருவாகியிருந்தது.
இந்நிலையில், எத்தியோப்பிய பிரதமர் அபை அஹமது அலி, அணை திட்டம் செப்டம்பரில் திறக்கப்படும் என்றும், எகிப்து மற்றும் சூடானுக்குரிய நீர் பங்கீடு வழங்கப்படும் என்றும் பார்லிமென்டில் அறிவித்தார். பல ஆண்டுகளாக விரிவடைந்த இந்த திட்டம், எத்தியோப்பியாவின் வளர்ச்சிக்கான மையசெயலாகவும், ஆப்ரிக்கா வரலாற்றில் முக்கியமாவதாகவும் பார்க்கப்படுகிறது.