வாஷிங்டன்: பயனர்களின் தரவை கண்காணித்ததாக குற்றம்சாட்டப்பட்ட கூகுள் மீது, முப்பதாயிரம் கோடி ரூபாய் (சுமார் 3.5 பில்லியன் டாலர்) அபராதம் விதித்து ஐரோப்பிய ஒன்றியம் உத்தரவிட்டுள்ளது. இதற்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

மொபைல் போன் பயன்பாடு உலகளவில் அதிகரித்து வரும் நிலையில், கூகுள் தரவுகளை தவறாக பயன்படுத்துவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. கூகுள் இதை மறுத்தாலும், விளம்பரத் துறையில் தனது ஆதிக்கத்தை தவறாக பயன்படுத்தியதாகக் கூறி, ஐரோப்பிய ஒன்றியம் அபராதம் விதித்தது. கூகுள் இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாகவும் அறிவித்துள்ளது.
இது குறித்து டிரம்ப், “கூகுள் உள்ளிட்ட அமெரிக்க நிறுவனங்களுக்கு விதிக்கப்படும் அபராதங்கள் வரியை விட அதிகம். இது முற்றிலும் நியாயமற்றது. முன்னதாக ஆப்பிள் நிறுவனத்திற்கு 17 பில்லியன் டாலர் அபராதம் விதிக்கப்பட்டது. இப்படிப்பட்ட அபராதங்கள் அமெரிக்க நிறுவனங்களை இலக்காகக் கொண்ட தாக்குதலே தவிர வேறில்லை” எனக் கூறினார். மேலும், “கூகுள் ஏற்கனவே 13 பில்லியன் டாலர் அபராதமாக செலுத்தியுள்ளது. இது பைத்தியக்காரத் தனமான நடைமுறையாகும்” எனவும் அவர் கண்டித்தார்.
டிரம்ப் தனது பதிவில், “அமெரிக்க நிறுவனங்களுக்கு எதிரான அபராதங்களை நிறுத்தாவிட்டால், பிரிவு 301 நடவடிக்கை எடுக்கப்படும். ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்த பாரபட்சமான நடவடிக்கை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். கூகுள் சிறப்பாக செயல்படுகிறது, இதற்காக நாங்கள் வருத்தப்படுகிறோம்” என்று வலியுறுத்தினார்.