இஸ்லாமாபாத்: காஷ்மீரின் பஹல்காமில் நடந்த தாக்குதலுக்கும், பாகிஸ்தானுக்கும் எந்த தொடர்பும் இல்லை. உள்நாட்டு அழுத்தத்தின் கீழ் இந்தியா தீவிர நடவடிக்கைகளை எடுத்தால், பாகிஸ்தான் முழுமையாக பதிலடி கொடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் பயங்கரவாதி ஹபீஸ் சயீத்தின் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் பினாமி அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் பிரண்ட் பொறுப்பு ஏற்றுள்ளது.
இந்த தாக்குதலையடுத்து பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கைகளை இந்தியா எடுத்துள்ளது. பாகிஸ்தானுடன் உறவு துண்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் பாகிஸ்தானின் தேசிய பாதுகாப்பு குழுவின் கூட்டத்தை அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் கூட்டியுள்ளார். இக்கூட்டம் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தலைமையில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில் இந்திய நடவடிக்கைகளுக்கு தகுந்த பதிலடி வழங்க முடிவுகள் எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அதன்படி பாகிஸ்தான் இன்று அவசர ஆலோசனையை நடத்துகிறது.
இதுதொடர்பாக பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் கூறும்போது, காஷ்மீரின் பஹல்காமில் நடந்த தாக்குதலுக்கும், பாகிஸ்தானுக்கும் எந்த தொடர்பும் இல்லை.
உள்நாட்டு அழுத்தத்தின் கீழ் இந்தியா தீவிர நடவடிக்கைகளை எடுத்தால், பாகிஸ்தான் முழுமையாக பதிலடி கொடுக்கும். அந்த திறன் பாகிஸ்தானுக்கு இருக்கிறது என்றார்.
இதற்கிடையே பாகிஸ்தானுடனான சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக இந்தியா அறிவித்துள்ளது. இதற்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக பாகிஸ்தான் தரப்பில் கூறும்போது, சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா ஒருதலைபட்சமாக நிறுத்தி வைக்க முடியாது. ஏனென்றால் இந்த ஒப்பந்தம் பாகிஸ்தான் மற்றும் இந்தியாவை மட்டுமல்ல, உலக வங்கி உள்பட பிற பங்குதாரர்களையும் உள்ளடக்கியது என்று தெரிவித்தது.