இஸ்ரேல் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஈரானில் இருந்து மிரட்டல் அழைப்புகள் வந்துள்ளன. டெஹ்ரானில் இருந்து அனுப்பப்பட்ட இந்த தொலைபேசி அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ்கள் பலருடைய மொபைல் போன்கள் ஹேக் செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தையும் உருவாக்கியுள்ளது. எஸ்எம்எஸ்களில், “நீங்களே உங்கள் கல்லறையைத் தோண்ட தொடங்கிவிட்டீர்கள்” என்ற வார்த்தைகள் இருந்ததால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேல் அரசியல் சூழலில் இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இஸ்ரேலின் நாடாளுமன்றமான க்னெஸ்செட்டில் 120 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்கள் தான் ஈரான் மீது நடவடிக்கை எடுக்க சட்டபூர்வமாக ஒப்புதல் அளித்தவர்கள். அவர்களிடம் வந்த இந்த மிரட்டல் அழைப்புகள், இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதட்டங்களை மேலும் தீவிரப்படுத்தும் சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. இந்நிலையில், இஸ்ரேல் அரசு இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறது.
ஈரான் தொடர்ந்து இஸ்ரேலுக்கு எதிராக அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது, அமெரிக்க ராணுவம் ஐரோப்பாவுக்கு பல விமானங்களை அனுப்பி இருக்கிறது. இதே நேரத்தில் ஈரான், அமெரிக்க தளவாடங்களை தாக்க தயாராகி வருகிறது. இதுதொடர்பாக, நியூயார்க் டைம்ஸ் வெளியிட்ட செய்தியில், மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தும் வாய்ப்பு இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
டிரம்ப் கடந்த நாட்களில் ஈரானை மிரட்டிய நிலையில், ஈரான் பதிலடி தாக்குதலுக்கு ஆயத்தமாக உள்ளது. குறைந்த மற்றும் நடுத்தர தூர ஏவுகணைகள், வான் தாக்குதல் ஆயுதங்கள் ஆகியவை தயார் நிலையில் வைத்துள்ளதையும் தகவல்கள் உறுதி செய்கின்றன. இது இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான மோதலை ஒரு பெரும் உலகப் போராக மாற்றக்கூடிய அபாயத்தை உருவாக்கியுள்ளது.
அமெரிக்கா ஈரானின் ஃபோர்டோ அணு நிலையத்தை தாக்கினால், அதற்கான பதிலடியாக அமெரிக்க ராணுவ தளவாடங்கள் தாக்கப்படும் என ஈரான் எச்சரித்துள்ளது. அமெரிக்க அதிகாரிகள் இந்த நிலைமையை மிகவும் கவலையுடன் அணுகி வருகின்றனர். இஸ்ரேல், ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான எதிர்மறையான நிலைமை, சர்வதேச அமைதிக்கு ஒரு பெரும் சவாலாகவே உருவாகலாம்.