இஸ்லாமாபாத்: ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சி மாநாடு பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் கடந்த 15 மற்றும் 16-ம் தேதிகளில் நடந்தது. இதில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்து கொண்டார்.
இது குறித்து பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பின் சகோதரரும், முன்னாள் பிரதமருமான நவாஸ் ஷெரீப் இஸ்லாமாபாத்தில் இந்திய நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்து கொண்டார். அவரது வருகை ஒரு நல்ல தொடக்கமாக அமைந்தது.
இங்கிருந்து இரு நாடுகளும் முன்னேற வேண்டும். இந்தியா – பாகிஸ்தான் இடையே புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது. எனது பதவிக் காலத்தில், இந்தியா-பாகிஸ்தான் உறவை மேம்படுத்த தீவிர முயற்சிகளை மேற்கொண்டேன்.
ஆனால் எனது முயற்சி தோல்வியடைந்தது. இந்திய பிரதமர் மோடி குறித்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் அவதூறான கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
இதனால் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவில் பாதிப்பு ஏற்பட்டது. எனது பதவிக் காலத்தில் பிரதமர் நரேந்திர மோடி லாகூரில் உள்ள எனது வீட்டிற்குச் சென்றார். இது சாதாரண விஷயம் இல்லை. அவரது வருகை சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்தது.
தற்போதைய சூழலில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் தலைவர்களுக்கு இடையே சுமுகமான உறவு இல்லை. ஆனால் இரு நாட்டு மக்களுக்கும் இடையே நல்லுறவு நீடிக்கிறது.
கிரிக்கெட் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை வளர்க்க வேண்டும். இந்தியாவில் இரண்டு கிரிக்கெட் அணிகள் விளையாடினால் அந்த போட்டியை பார்க்க இந்தியா வருவேன்.
இந்தியாவின் விவசாய பொருட்கள் மற்றும் பிற பொருட்கள் துபாய், ஐக்கிய அரபு அமீரகத்திற்கு அனுப்பப்படுகின்றன. அங்கிருந்து இந்திய பொருட்கள் பாகிஸ்தானுக்கு வந்து சேரும்.
இந்தியாவின் அமிர்தசரஸில் இருந்து பாகிஸ்தானுக்கு இரண்டு மணி நேரத்தில் பொருட்களைக் கொண்டு வரலாம். ஆனால் இப்போது துபாய் வழியாக 2 வாரங்களுக்குப் பிறகு பொருட்கள் வந்தடைகின்றன.
இதனால் இரு நாடுகளுக்கும் எந்த லாபமும் இல்லை. 1999-ல் அப்போதைய இந்தியப் பிரதமர் வாஜ்பாய் லாகூர் சென்றார். அவரது பாகிஸ்தான் பயணம் தொடர்பான வீடியோக்களை அடிக்கடி பார்ப்பேன்.
எனக்கு இன்னும் பழைய சம்பவங்கள் நினைவிருக்கிறது. எனது தந்தை முகமது ஷெரீப் இந்தியாவின் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸைச் சேர்ந்தவர். இந்தியா நமது அண்டை நாடு. இதை மாற்ற முடியாது.
நாம் ஏற்கனவே 75 வருடங்களை இழந்துவிட்டோம். இப்போது அடுத்த 75 ஆண்டுகளைப் பற்றி சிந்திக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புடன் அவரது மகளும் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண முதலமைச்சருமான மரியம் உடன் சென்றார்.