வடகொரியா: அமெரிக்க தேர்தல் நடந்து வரும் நிலையில் தென் கொரியாவையும் அதற்கு உதவும் அமெரிக்காவையும் பரம எதிரியாக கருதும் வட கொரியா பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை செய்து சர்வதேச அரங்கில் பீதியை கிளப்பியுள்ளது.
சமீப காலங்களாகவே அமெரிக்காவுக்கு தொடர்ந்து அணு ஆயுத மிரட்டல் விடுத்துவரும் வட கொரியா எதிரிக்கு எதிரி நண்பன் என்ற வகையில் ரஷியாவுடன் நட்பு பாராட்டி வருகிறது. உக்ரைன் போர் சூழலில் ரஷியாவுக்கு 12 ஆயிரம் வரையிலான வட கொரிய ராணுவ வீரர்கள் அனுப்பப்பட்டுள்ளனர். தென் கொரியாவும், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும் இதை உறுதிப்படுத்தி உள்ளனர்.
இந்நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தல் நடந்து வரும் நிலையில் சில மணி நேரங்களுக்கு முன்னதாக வட கொரிய ராணுவம் குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளை கிழக்கு கடல் நோக்கி ஏவி சோதனை செய்துள்ளது. இதை தென் கொரியாவும், ஜப்பானும் உறுதிப்படுத்தியுள்ளது.
அந்த ஏவுகணைகள் சுமார் 400 கி.மீ. தூரம் வரை பாய்ந்து சென்று கடலில் விழுந்ததாக கூறப்படுகிறது. சர்வதேச அரசியல் களம் அமெரிக்க தேர்தலை நோக்கி திரும்பியிருக்க வடகொரியாவின் இந்த சோதனை உலக நாடுகளிடையே அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.