
பாகிஸ்தான், தீவிரவாத குழுக்களுக்கு நிதியுதவி அளித்து ஆதரவளித்து வந்ததை அதன் பாதுகாப்பு அமைச்சர் குவாஜா ஆசிஃப் நேரடியாக ஒப்புக்கொண்டுள்ளார். ஸ்கை நியூஸின் தொகுப்பாளர் யால்டா ஹக்கிமுடன் நடந்த நேர்காணலில், “தீவிரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் நீண்ட காலமாக ஆதரவளித்து, பயிற்சி அளித்து, நிதியுதவி அளித்து வந்ததை ஒப்புக்கொள்கிறீர்களா?” என்ற கேள்விக்கு பதிலளிக்கும்போது, குவாஜா ஆசிஃப், “அமெரிக்கா மற்றும் பிரிட்டன் போன்ற மேற்கத்திய நாடுகளுக்காக சுமார் 30 ஆண்டுகளாக இந்த மோசமான வேலையை செய்து வந்தோம். இது ஒரு தவறு. அதற்காக நாங்கள் பாதிக்கப்பட்டுள்ளோம். அதனால்தான் இப்போது நீங்கள் இதைப் பற்றி என்னிடம் கேட்கிறீர்கள். சோவியத் யூனியனுடனான போரிலும், 9/11 பிந்தைய போரிலும் பங்கேற்கவில்லை என்றால் பாகிஸ்தான் குற்றமற்றதாக இருந்திருக்கும்” என்றார்.

அதே நேர்காணலில், இந்தியாவுடன் முழுமையான போர் சாத்தியமுள்ளதாகவும் குவாஜா ஆசிஃப் எச்சரிக்கை விடுத்துள்ளார். அவரது இந்த கூற்று, பாகிஸ்தான் பல ஆண்டுகளாக பயங்கரவாதிகளுக்கு பாதுகாப்பளித்து வருவதை உறுதிப்படுத்தும் வகையில் உள்ளது.
பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, இந்திய அரசு பல இராஜதந்திர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதில், அட்டாரி ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியை மூடுவது, பாகிஸ்தான் குடிமக்களுக்கு வழங்கப்பட்ட SAARC விசா விலக்குத் திட்டத்தை நிறுத்துவது, பாகிஸ்தான் நாட்டு குடிமக்களுக்கு 40 மணி நேரத்துக்குள் நாடு திரும்ப அறிவுறுத்தல் விடுப்பது, இரு நாடுகளின் உயர்நிலை ஆணையங்களில் உள்ள அதிகாரிகளின் எண்ணிக்கையை குறைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன.
பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு, இந்தியா 1960 இல் கையெழுத்தான சிந்து நீர் ஒப்பந்தத்தையும் நிறுத்தியுள்ளது. தாக்குதலுக்குப் பொறுப்பான பயங்கரவாதிகளும், அதில் சதி செய்தவர்களும் கடுமையான தண்டனையை சந்திப்பார்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதியாக கூறியுள்ளார்.