ரஷ்யா: அமைதி வழியையே நாங்கள் விரும்பினோம்; ஆனால் உக்ரைன் தான் எங்களுடனான பேச்சுவார்த்தையை நிறுத்திவிட்ட்து என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த 2022 பிப்ரவரி முதல் ரஷ்யா – உக்ரைன் போர் நீடித்துவரும் நிலையில் புதின் இவ்வாறு கூறியுள்ளார். பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகளை உள்ளடக்கிய கூட்டமைப்பு `பிரிக்ஸ்’ (BRICS) என்று அழைக்கப்படுகிறது. இந்தக் கூட்டமைப்பின் மாநாடு ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் 2024-ம் ஆண்டுக்கான பிரிக்ஸ் அமைப்பின் 16-வது உச்சிமாநாடு ரஷ்யாவின் தலைமையில் நடைபெற உள்ளது.
ரஷ்யாவில் உள்ள காசான் பகுதியில் வரும் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெறும் பிரிக்ஸ் உச்சிமாநாடு நடைபெறுகிறது. இதனை ஒட்டி ஊடகங்களுக்குப் பேட்டியளித்துள்ள ரஷ்ய அதிபர் புதின் கூறியதாவது: உக்ரைனுடனான பிரச்சினையை அமைதி வழியில் தீர்க்கவே நாங்கள் விரும்பினோம். ஆனால் உக்ரைன் தான் அமைதிப் பேச்சுவார்த்தையை துண்டித்துக் கொண்டது
இந்தப் பிரச்சினை வலுக்க அமெரிக்கா தான் காரணம். உலக நாடுகள் பலவும், ஏன் அமெரிக்காவின் பாரம்பரிய கூட்டாளிகள் கூட இப்போதெல்லாம் அமெரிக்க டாலரை வைத்து பொருளாதாரத்தை நிர்ணயிப்பதில் இருந்து பின் வாங்குகின்றனர். சீனா மிகப்பெரிய பொருளாதாரமாக வளர்ந்து வருகிறது. சீனாவின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது. ரஷ்யாவும் – சீனாவும் ஒரு தனித்துவ உறவைப் பேணுகிறது.
எங்களது உறவு சர்வதேச ஸ்திரத்தன்மையை நிர்ணயிக்கிறது. மேலும் பிரிக்ஸ் என்பது மேற்கத்திய நாடுகளுக்கு எதிரானது அல்ல. இந்தியப் பிரதமர் மோடி கூறியதுபோல் இது மேற்கத்திய நாடுகளின் பிரதிநிதித்துவம் இல்லாத ஓர் அமைப்பு. பிரிக்ஸ் உலகளாவிய தெற்கு, தென்கிழக்கு மற்றும் ஆப்பிரிக்க நாடுகளின் வளர்ச்சியில் கவனத்தை குவிக்கிறது.
பிரிக்ஸ் உறுப்பு நாடுகள் குறிப்பிடத்தக்க நிலப்பரப்பையும், மக்கள் தொகையையும் கொண்டுள்ளன. பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையேயான வர்த்தக உறவு குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டு வருகிறது. சர்வதேச பொருளாதாரத்தில் பிரிக்ஸ் நாடுகள் முக்கிய பங்களிப்பு செய்யும் நாடுகளாக உருவெடுத்து வருகிறது. இவ்வாறு புதின் கூறினார்.