பாரீஸ் : உக்ரைனுக்காக பாதுகாப்புப் படை உருவாக்குவது குறித்து பேச்சுவார்த்தை நடத்த 30-க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்கிறது என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
உக்ரைன் மீது ரஷியா கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் திடீரென படையெடுத்தது. தொடக்கத்தில் ரஷியா எல்லையில் உள்ள பகுதிகளை பிடித்தது. பின்னர் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் உதவியுடன் உக்ரைன பதிலடி கொடுத்தது.
இதனால் பெரும்பாலான பகுதியில் இருந்து ரஷிய ராணுவம் பின்வாங்கியது.கடந்த 4 ஆண்டுகளாக இரு நாடுளுக்கும் இடையில் இந்த சண்டை நீடித்து வருகிறது. இரு நாடுகளும் ஆயிரக்கணக்கான உயிர்களை இழந்த நிலையில், மிகப்பெரிய அளவில் பொருட்சேதத்தையும் எதிர்கொண்டுள்ளன. உலகப் பொருளாதாரத்திற்கு ரஷியா-உக்ரைன் சண்டை மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
அமெரிக்கா அதிபராக டொனால்டு டிரம்ப் கடந்த ஜனவரி மாதம் 20-ந்தேதி பதவி ஏற்றார். அதன்பின் இரு நாடுகளுக்கு இடையில் போர் நிறுத்தம் ஏற்பட்ட முயற்சி மேற்கொண்டு வருகிறார். விரைவில் உக்ரைன் போர் நிறுத்தத்திற்கு சம்மதம் தெரிவிக்கும் எனத் தெரிகிறது.இதற்கிடையே வெள்ளை மாளிகையில் பத்திரிகையாளர்களை சந்திக்கும்போது டொனால்டு டிரம்ப்- உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனைத்தொடர்ந்து உக்ரைனுக்கு வழங்கும் உதவியை நிறுத்துவதாக டிரம்ப் அறிவித்தார்.அதேவேளையில் பிரான்ஸ் ராணுவ உதவியை அதிகரிக்க முடிவு செய்தது. தற்போது போர் நிறுத்தம் ஏற்பட்டாலும், பிற்காலத்தில் ரஷியா மீண்டும் படையெடுக்காது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. இது தொடர்பான அச்சம் உக்ரைன் மற்றும் உலக நாடுகளுக்கு உள்ளது.இதனால் ரஷியா போர் நிறுத்தத்திற்குப் பிறகு ஒருவேளை படையெடுத்தால், உக்ரைனுக்கு உதவுவதற்காக பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் ஒரு பாதுகாப்புப் படையை உருவாக்க திட்டமிட்டுள்ளன.
இது தொடர்பாக நாளை பாரீஸ் நகரில் பேச்சுவார்த்தை நடைபெற இருக்கிறது. இதில் 30 நாட்டிற்கும் மேற்பட்ட ராணுவ அதிகாரிகள் கலந்து கொள்வார்கள் என பிரான்ஸ் ராணுவ அதிகாரி தெரிவித்துள்ளார். இந்த கூட்டத்தின் முதற்பகுதியில் பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்தின் திட்டம் குறித்து விவரிக்கப்படும். அதன்பின் மற்ற நாடுகளின் பாதுகாப்புப் படையில் பங்கேற்பது குறித்து விவாதிக்கப்பட இருக்கிறது.