சவுதி அரேபியா பயணமாக சென்ற பிரதமர் நரேந்திர மோடியை விமான நிலையத்தில் இருந்து ஹோட்டல் வரையிலும் உற்சாகமாக வரவேற்றனர். அவரை வரவேற்க இந்தியர்கள் திரண்டதுடன், அவருடைய வருகையை முன்னிட்டு ஹோட்டல் வளாகத்தில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பிரதமர் மோடி வந்ததைக் கண்டு மகிழ்ந்த இந்தியர்கள் பலர் அவருடன் கை குலுக்க முற்பட்டனர்.

சவுதி அரேபியாவில் தற்போது சுமார் 27 லட்சம் இந்தியர்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த மக்களின் நலன் மற்றும் ஹஜ் பயணத் தொடர்பான சில கட்டுப்பாடுகளை நீக்குவது குறித்து பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மோடி ஹோட்டலுக்குள் வந்தவுடன், சவுதி அரேபியாவில் வாழும் இந்தியர்கள் உற்சாகமாக பாடல்கள் பாடி அவரை வரவேற்றனர். அந்த தருணத்தில், சவுதி பாடகர் ஹசீம் அப்பாஸ் ‘ஏ வத்தன்’ என்ற ஹிந்தி திரைப்படப் பாடலை பாடினார். கைகளைத் தட்டி, கூட்டத்துடன் இணைந்து அந்தப் பாடலை மோடி ரசித்து கேட்ட காட்சி அனைவரையும் கவர்ந்தது.
இந்த வருகையின் முக்கிய அம்சங்களில் ஒன்று, இந்தியா மற்றும் சவுதி அரேபியா இடையே நிலவும் ராணுவ ஒத்துழைப்பும் ஆகும். மோடியின் விமானம் சவுதி வான்வெளிக்குள் நுழைந்தவுடன், அந்த நாட்டின் விமானப்படையைச் சேர்ந்த இரண்டு போர் விமானங்கள் அவருடைய விமானத்துக்கு பாதுகாப்பாக வழிவகுத்தன. இது இரு நாடுகளின் நட்புறவுக்கும் ராணுவ ஒத்துழைப்புக்கும் சின்னமாக அமைந்தது.
மோடியின் இந்த பயணம், இரு நாட்டு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. மேலும், ஹஜ் பயணத்திற்கான செயல்முறைகளிலும் புதிய மாற்றங்களை மேற்கொள்ளும் நோக்கத்தில் ஆலோசனைகள் நடத்தப்படுவதாக எதிர்பார்க்கப்படுகிறது.