தெக்ரான்: ஈரான் எண்ணெய் கிடங்குகள் மீது அமெரிக்கா – இஸ்ரேல் படைகள் சரமாரி குண்டுவீசி வருவதால் பெரும் பதற்றம் உருவாகி உள்ளது.
அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் ஈரான் மீது அமெரிக்கா-இஸ்ரேல் இணைந்து போர் தொடுத்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு பதிலடியாக ஈரானும் இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இப்போர் இன்று 9-வது நாளாக நீடிக்கிறது.
அமெரிக்கா-இஸ்ரேல் படைகள் இணைந்து நடத்தும் இந்த தாக்குதலில் ஈரானின் ராணுவ நிலைகள், அரசாங்கம் தொடர்பான கட்டிடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டன.
இந்த நிலையில் ஈரானில் உள்ள எண்ணெய் கிடங்குகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டன. இப்போரில் முதல் முறையாக ஈரானின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் குறி வைக்கப்பட்டன.
தலைநகர் தெக்ரானின் ஷாஹ்ரானில் உள்ள எண்ணெய் கிடங்கு மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதில் அந்த எண்ணெய் கிடங்கு தீப்பிடித்தது. அங்கு விண்ணை முட்டும் அளவுக்கு புகை மண்டலம் எழும்பியது.
அதேபோல் தெக்ரானின் கோஹாக்கில் உள்ள எண்ணெய் கிடங்கு மற்றும் மேற்கு தெக்ரானின் கராஜில் உள்ள எண்ணெய் கிடங்கு ஆகியவை மீதும் தாக்குதல் நடத்தப்பட்டன. இதில் அந்த எண்ணெய் கிடங்குகள் தீப்பிடித்து கொழுந்துவிட்டு எரிகின்றன. அதே போல் அல்போர்ஸ் மாகாணத்தில் உள்ள எண்ணெய் கிடங்குகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. எண்ணெய் கிடங்குகள் மீதான தாக்குதலில் 4 ஊழியர்கள் பலியானார்கள்.
இது தொடர்பாக இஸ்ரேல் ராணுவம் கூறும்போது, ஈரான் அரசாங்கம் தனது ராணுவப் படைகள், ராணுவ உள்கட்டமைப்பை இயக்க இந்த எண்ணெய் கிடங்குகளை அடிக்கடி பயன்படுத்துகின்றன. அவற்றின் மூலம் ஈரானில் உள்ள ராணுவ நிறுவனங்களுக்கு எரிபொருள் விநியோகிக்கப்படுகிறது.
இந்த எண்ணெய் கிடங்கு மீது கடும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் ஈரான் ஆட்சியின் ராணுவ உள்கட்டமைப்பிற்கு ஏற்படும் சேதத்தை ஆழப்படுத்துவதில் கூடுதல் படியாகும் என்று தெரிவித்தது.