ஒரு நாட்டின் வளர்ச்சியை அமைத்துக்கொள்ளும் முக்கியமான கூறுகளில் குடிமக்களின் ஆயுட்காலம் முக்கிய பங்கு வகிக்கிறது. நல்ல சுகாதார வசதிகள், சீரான உணவுமுறை, சுறுசுறுப்பான வாழ்க்கை முறை மற்றும் உறுதியான சமூக உறவுகள் ஆகியவை ஒரு நாட்டின் குடிமக்கள் ஆரோக்கியமாகவும் நீண்ட ஆயுளுடனும் வாழ வழிவகுக்கின்றன. உடல் மற்றும் மன நலனுக்கும் சம முக்கியத்துவம் அளிக்கும் நாடுகள் ஆயுட்காலத்தில் முன்னணியில் உள்ளன.

உலக மக்கள்தொகை மதிப்பீட்டின் அடிப்படையில், அதிக ஆயுட்காலம் கொண்ட நாடுகள் பட்டியலில் சீனாவின் ஹாங்காங் முதலிடம் பிடித்துள்ளது. இங்கு வசிக்கும் நபர்களின் சராசரி ஆயுட்காலம் 85.77 ஆண்டுகள். சிறந்த சுகாதாரப் பராமரிப்பு, சுத்தமான சுற்றுச்சூழல், ஆரோக்கியமான உணவுகள் மற்றும் உடற்பயிற்சிக்கு ஊக்கமளிக்கும் வாழ்க்கை முறை இதற்கு காரணமாக உள்ளன.
இதைத் தொடர்ந்து ஜப்பான் 85 ஆண்டுகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. அங்கு மக்கள் குறைந்த கொழுப்பு உணவுகளை எடுத்துக் கொள்வது, ஒழுங்கான வாழ்க்கை முறை மற்றும் நெறிமுறைகளை பின்பற்றுவது ஆகியவை முக்கிய காரணிகளாகும்.
மூன்றாவது இடத்தில் தென்கொரியா 84.53 ஆண்டுகளுடன் உள்ளது. பிரான்ஸ் 84.31 ஆண்டுகளுடன் நான்காவது இடத்திலும், சுவிட்சர்லாந்து 84.23 ஆண்டுகளுடன் ஐந்தாவது இடத்திலும் உள்ளது. ஆஸ்திரேலியா (84.21), இத்தாலி (84.03), சிங்கப்பூர் (84), ஸ்பெயின் (83.96), நார்வே (83.61) ஆகியவை முறையே 6 முதல் 10 இடங்களையும் பிடித்துள்ளன.
இந்த நாடுகள் அனைவரும் சுத்தமான உணவுகள், மன நலனில் கவனம், உடற்பயிற்சி மற்றும் மக்கள் ஒழுங்கு முறையை பின்பற்றுவது போன்ற காரணிகளால் உயர்ந்த ஆயுட்காலத்தை பெற்று வருகின்றன.
இந்தியாவை ஒப்பிட்டால், அதிக மக்கள்தொகையைக் கொண்டிருந்தும், சராசரி ஆயுட்காலம் குறைவாக உள்ளது. இந்தியா இந்த பட்டியலில் 125வது இடத்தில் உள்ளது. இந்தியர்களின் சராசரி ஆயுட்காலம் 72.48 ஆண்டுகள். 2025ஆம் ஆண்டு தரவுகளின்படி, பெண்கள் 74.13 ஆண்டுகள் மற்றும் ஆண்கள் 70.95 ஆண்டுகள் வாழ்கின்றனர்.
இந்த தகவல்கள் ஒரு நாட்டின் ஆரோக்கிய நிலை மற்றும் வளர்ச்சி அடிப்படையிலான ஒப்பீடுகளுக்கு வழிகாட்டியாக இருக்கின்றன.