ரியாத்: மேற்காசிய நாடான சிரியாவில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து, கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்கா விதித்திருந்த பொருளாதார தடைகளை நீக்குவதாக அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.
சிரியா கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஆசாத் குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது. 1979ம் ஆண்டு முதல் பயங்கரவாத ஆதரவு குற்றச்சாட்டின் கீழ் அமெரிக்கா அந்த நாட்டின் மீது பொருளாதார தடைகளை விதித்தது. இந்த தடைகள் 2004ம் ஆண்டு பஷார் அல் ஆசாத் அதிபராக பதவியேற்ற பின்னர் மேலும் கடுமையாகக்கப்பட்டன.
அசாத் ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சிகள் எழுந்து, கடந்த ஆண்டு உள்நாட்டு போராக வெடித்தது. கிளர்ச்சிக் கூட்டணிக்கு அகமது அல் ஷாரா தலைமை வகித்தார். இவர் தலைமையிலான படைகள் கடந்த டிசம்பரில் நாடு முழுவதையும் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டன. பஷார் அல் ஆசாத், ரஷ்யாவுக்கு தப்பிச் சென்று தஞ்சமடைந்தார்.

அதன்பின்னர், அகமது அல் ஷாரா இடைக்கால அதிபராக பதவியேற்றார். அவர் மேற்காசிய நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தின் போது சவுதி அரேபியாவில் அமெரிக்க அதிபர் டிரம்பை சந்தித்தார். இந்த சந்திப்பு சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானின் ஏற்பாட்டில் நடைபெற்றது. இரண்டு தலைவர்களும் ரியாதில் 33 நிமிடங்கள் சந்தித்து பேசினர்.
இதனைத் தொடர்ந்து, டிரம்ப் வெளியிட்ட அறிவிப்பில், “சிரியா மீது கடந்த காலங்களில் பயங்கரவாத தொடர்புகளுக்காக பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டிருந்தன. ஆனால் தற்போதைய புதிய ஆட்சி அமைந்துள்ளதால், சிரியா மீண்டும் முன்னேறும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்நிலையில், அமெரிக்கா தனது பொருளாதார தடைகளை பின் வாங்குகிறது. சிரியா அமைதி, வளர்ச்சி, மற்றும் நவீன எதிர்காலத்திற்காக புதிய பாதையில் பயணிக்கத் தயாராகியுள்ளது” என்றார்.