வாஷிங்டன்: ரஷ்யா-உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர உலக நாடுகள் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வலியுறுத்தியுள்ளார். குறிப்பாக, நேட்டோ நாடுகள் சீனாவுக்கு எதிராக 50 முதல் 100 சதவீதம் வரி விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் அவர் முன்வைத்துள்ளார். ரஷ்யாவின் எண்ணெய் வாங்குவதை நிறுத்தினால் மட்டுமே போருக்கு தீர்வு கிடைக்கும் என்றும் டிரம்ப் தெரிவித்தார்.
டிரம்ப் மேலும் கூறியதாவது: நேட்டோ நாடுகள் இன்னும் ரஷ்ய எண்ணெயை வாங்கிக் கொண்டிருப்பது மிகப் பெரிய பலவீனமாகும். இது ரஷ்யாவுக்கு எதிரான பேச்சுவார்த்தை சக்தியை குறைத்து வருகிறது. ஆகையால், அவர்கள் ஒன்றுபட்டு நடவடிக்கை எடுப்பதே அவசியம். நேட்டோ நாடுகள் தங்களின் அர்ப்பணிப்பை முழுமையாக காட்ட வேண்டும், இல்லையெனில் போரில் எந்த முன்னேற்றமும் ஏற்படாது என்று எச்சரித்தார்.

அமெரிக்க அதிபர் டிரம்ப், சீனாவுக்கு 50% முதல் 100% வரை வரிகளை விதிக்க வேண்டும் என்ற திட்டத்தை வெளிப்படையாக கூறினார். இந்த நடவடிக்கை போரின் முடிவை விரைவுபடுத்தும் என்றும், போர் முடிந்ததும் இந்த வரிகள் திரும்பப் பெறப்படும் என்றும் உறுதியளித்தார். இது உலக பொருளாதாரத்திலும், அரசியல் தளத்திலும் முக்கிய தாக்கம் ஏற்படுத்தும் என்று அவர் நம்புகிறார்.
மேலும், சீனா மட்டுமின்றி, இந்தியா போன்ற ரஷ்ய கச்சா எண்ணெயை தொடர்ந்து இறக்குமதி செய்யும் நாடுகளும் இரண்டாம் நிலைத் தடைகளுக்கு உள்ளாக நேரிடலாம் என எச்சரித்தார். போருக்கு விரைவான தீர்வு காணப்படாவிட்டால், அமெரிக்கா தனது நேரம், பணம் மற்றும் சக்தியை வீணாக்கும் நிலை உருவாகும் என்றும் டிரம்ப் கடுமையாக குறிப்பிட்டார்.